பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 309

6550.

'தும்பி ஈட்டமும் இரதமும், புரவியும், தொடர்ந்த
அம் பொன் மாப் படை ஐ-இரு கோடி கொண்டு 

அமைந்தான்,

செம் பொன் நாட்டு உள சித்தரைச் சிறையிடை 

வைத்தான்.

கும்பன் என்று உளன்; ஊழி வெங் கதிரினும் 

கொடியான்.

 

தும்பி ஈட்டமும், இரதமும் புரவியும்- யானைக் கூட்டமும்,
தேர் குதிரை ஆகியவற்றுடன்; தொடர்ந்த அம்பொன் மாப்படை
- சேர்ந்த அழகிய பொன் போன்ற அரிய பெரிய  படை;   ஐயிரு
கோடி கொண்டமைந்தான்
- பத்துக் கோடி பேரைக்    கொண்டு
அமைந்தவனும்; செம்பொன் நாட்டுள   சித்தரை - செம்பொன்
நாடாகிய   தேவ   உலகில் வாழும்    சித்தர்களை;  சிறையிடை
வைத்தான்
- போரில் வென்று சிறையிலே வைத்தவனுமான; ஊழி
வெங்கதிரினும் கொடியான்
-   யுகாந்த    காலத்துச் சூரியனை
விடவும் கொடியவன்; கும்பன்   என்று   உளன்  -   கும்பன்
என்பவனும் இருக்கிறான்.
 

தும்பி - யானை. செம்பொன் - சிவந்த பொன்.  பொன் நாடு-
தேவர்கள் உலகம்.சித்தர்  என்பார்   தேவர்களில்    ஒருவகைப்
பிரிவினராவர். சித்தர்களைவென்று சிறையில் வைத்தவன்  கும்பன்.
'ஊழிவெங்கதிர்" ஊழிக் காலத்தின்  இறுதியில் உலகை  அழிக்கத்
தோன்றும் வெப்பம் மிக்க   சூரியன்.  அந்தப் பரிதியை  விடவும்
கொடியவன் கும்பன் என்பது கருத்து. 
 

(35)
 

6551.

'பேயை யாளியை யானையைக் கழுதையைப் 

பிணித்தது

ஆய தேர்ப் படை ஐ-இரு கோடி கொண்டு 

அமைந்தான்

தாயைஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா
மாயையான் உளன், மகோதரன் என்று ஒரு 

மறவோன்.

 

பேயை யாளியை யானையை- பேய்களையும், யாளிகளையும்
யானைகளையும்; கழுதையைப் பிணித்த தாய - கழுதைகளையும்
பூட்டியதாகிய; தேர்ப்படை ஐயிரு கோடி கொண்டமைந்தான்-
தேர்ப்படைபத்துக் கோடியை யுடையவன்; தாயை ஆயினும்