இராமன் அம்புகளால் கடல்பட்டபாடு |
6607. | மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா, |
| ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த, |
| பேன நீர் நெடு நெய் என, பெய் கணை நெருப்பால் |
| கூனை அங்கியின் குண்டம் ஒத்தது, கடற் குட்டம். |
| |
மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா- கடலில் உள்ள மீன்களும், நாகங்களும் விண்ணைத் தொடும் மலைகளும் விறகாகவும்; ஏனை நிற்பன யாவையும்- மற்றும் அங்கு நிற்கும் மரங்களும்; மேல் எரி எய்த- கடல்மீது நெருப்புப்பற்றி எரிதலால்; பேன நீர் நெடு நெய் என- நுரையோடு கூடிய கடல் நீர் எல்லாம் நெய்யாகவும்; பெய்கணை நெருப்பால்- இராமன் கடல்மீது விட்ட அம்புகளாகிய தீயினால் ; கடற்குட்டம்- அக் கடலாகியபள்ளம்; கூனை அங்கியின் குண்டம் ஒத்தது- வளைந்த நெருப்பெரியும் யாக குண்டத்தை ஒத்திருந்தது. |
கடற்குட்டம் அங்கியின் குண்டம் ஒத்தது என்பது கருத்து. பேனம் - நுரை கூனை - வளைவு. குட்டம் - பள்ளம் (குட்டை) கடலை இழித்துக் குட்டம் என்றார். உருவகத்தை உறுப்பாகக் கொண்ட தற்குறிப்பேற்ற அணி; உருவகம் எனினுமாம். |
(19) |
6608. | பாழி வல் நெடுங் கொடுஞ் சிலை வழங்கிய பகழி, |
| ஏழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி, |
| ஊழி வெங் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து |
| ஓடி, |
| ஆழி மால் வரைக்கு அப் புறத்து இருளையும் |
| அவித்த. |
| |
பாழிவல் நெடுங் கொடுஞ்சிலை- இராமபிரானுடைய பெரிய, வலிய நெடிய, கொடிய வில்; வழங்கிய பகழி- வழங்கிய அம்புகள்; ஏழு வேலையும் எரியொடு புகைமடுத்து ஏகி-ஏழு கடல்களிலும் நெருப்புடன் புகையை நிறைத்துக் கொண்டு சென்று; ஊழிவெங்கனல் கொழுந்துகள்- ஊழிக்காலத்தில் தோன்றும் வெம்மையான தீயினது கொழுந்துகளைப் போல;, உருத்து எழுந்து ஓடி- சினந்து எழுந்து ஓடி; ஆழிமால் வரைக்கு அப்புறத்து - சக்கரவாள கிரிக்கும் அப்புறத்துள்ள; இருளையும் அவித்த- இருட்டையும் அணைத்தன (நீக்கின). |