மறிந்தன கரிந்தன வானப்புள் எலாம்- நெருப்புப் பற்றியதால், ஆண்பறவைகளெல்லாம் வீழ்ந்து கருகி மாண்டன. |
துணையைப் பிரிந்தவர்கள் துன்பம் அனுபவிப்பார்கள் என்பதை இராமபிரான் அறியாதிருக்க முடியாது. அப்படி அறிந்த பெருமானே பெண் பறவைகள் இறந்து போகும்படி செய்து விட்டானே என்று சொல்லிக் கொண்டே தம் பேடுகளை நாடிச் சென்ற ஆண் பறவைகள் கனலில் வீழ்ந்து மாண்டன.- இது இச் செய்யுளில் கற்பனை செய்து உரைக்கும் செய்தி. 'பிரிந்தவர்' என்ற சொல் எதுகை நோக்கிப் 'பிறிந்தவர்' என வந்தது. மறிந்தன (வாய்): முற்றெச்சம். ஓர்-அசை. |
(37) |
6626. | கமை அறு கருங் கடல், கனலி கைபரந்து, |
| அமை வனம் ஒத்த போது, அறைய வேண்டுமோ? |
| சுமையுறு பெரும் புகைப் படலம் சுற்றலால், |
| இமையவர் இமைத்தனர்; வியர்ப்பும் எய்தினார். |
| |
கமை அறு கருங்கடல் - பொறுமையற்று எப்போதும் முழங்கிக் கொண்டிருக்கும் கரிய கடல்; கனலி கை பரந்து- இராமபிரான் எய்த அம்புகளால் உண்டான நெருப்பு பக்கங்களிலெல்லாம் பரவ; அமை வனம் ஒத்த போது- தீப்பிடித் தெரிந்த மூங்கிற் காட்டை ஒத்திருந்தபோது; அறைய வேண்டுமோ - அதைக் கூற வேண்டுமோ?; சுமை உறு பெரும்புகைப்படலம் சுற்றலால்- சுமை பொருந்திய பெரிய புகைப்படலம் சூழ்ந்தமையால்; இமையவர் இமைத்தனர்- இமையா நாட்டம் கொண்ட தேவர்கள் கண்களை இமைக்கலாயினர்; வியர்ப்பும் எய்தினர் - உடம்பில் வியர்வையும் எய்தினார்கள். |
கமை - பொறுமை, கடல் எப்போதும் ஓய்வின்றி முழங்கிக் கொண்டே இருப்பதால் 'கமை அறு கருங்கடல்' என்றார். எங்கும் நெருப்பு பரவி எரிந்து கொண்டிருப்பது, மூங்கிற்காடு தீப்பிடித் தெரிவதை ஒத்திருந்தது என்பதை கனலி கை பரந்து அமைவனம் ஒத்தபோது' என்றார். அமை - மூங்கில். |
(38) |
6627. | பூச் செலாதவள் நடை போல்கிலாமையால், |
| ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும், |
| தீச் செலா நெறி பிறிது இன்மையால், திசை |
| மீச் செலா; புனலவன் புகழின் வீந்தவால். |