பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 361

பூச்செலாதவள்-  பூமேல்கூட  நடக்க  முடியாதவளாகிய
சீதையின்;     நடை    போல்கிலாமையால்   -   நடையை
ஒத்தில்லாமையினால்;ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்-
பழிப்புக்கு ஆளாகிய அன்னப்  பறவைகள் எல்லாம்;  தீச்செலா
நெறி பிறிது   இன்மையால்
- தீ செல்லாத வழி வேறு எதுவும்
இல்லாமையாலே;  திசை  மீச் செலா - எல்லாத்  திசைகளிலும்
மேலே  பறந்து   செல்ல;  புனலவன்   புகழின்  வீந்தவால்-
அதனால்,  கடலரசனான வருணனது  புகழ் எவ்வாறு அழிந்ததோ
அதுபோல அழிந்தொழியலாயின.
 

பூச்  செலாதவள் - சீதாபிராட்டியின்  மென்மை  குறித்தது.
அனிச்சமும் அன்னத்தின்  தூவியும் மாதர்  அடிக்கு நெருஞ்சிப்
பழம்  (குறள் 1120)  என்ற  வள்ளுவர் கற்பனையை ஒப்பிட்டுப்
பிராட்டியின் திருவடி  மென்மையை  உணர்க.  சீதையின்  நடை
போன்ற அழகிய நடை அன்னங்களுக்கில்லாமையால் பழிப்புக்கு
அவை  ஆளாயின  என்பதை    'நடை    போல்கிலாமையால்
ஏச்செலாம் எய்திய எகினம்' என்றார். 'ஏச்சுச்சகிக்காத அன்னம்
தீயில்   வீழ்ந்து    இறந்தது'   என்பது  கருத்து.   நெருப்பின்
வெம்மையால்  கருகிய   காட்சியைக்   கற்பனை  மெருகூட்டிக்
கம்பர்  கூறுகிறார். புனலவன் - கடலரசனான  வருணன். இராம
பிரானுடைய அம்புகளால் அவன்  புகழ் அழிந்தது. அது போல
அன்னங்கள் அழிந்தன என்றார். மீச்செலா - மேலே சென்று.
 

(39)
 

6628.

பம்புறு நெடுங் கடல் பறவை யாவையும்,
உம்பரின் செல்லலுற்று, உருகி வீழ்ந்தன;
அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல,
இம்பரில் உதிர்ந்தன, எரியும் மெய்யன.
 

பம்புறு   நெடுங்கடல்   பறவையாவையும்  -  எங்கும்
பரந்துள்ள  நீண்ட கடலில் வாழும் நீர்ப்பறவைகள் அனைத்தும்;
உம்பரில்   செல்லலுற்று  -  மேலே   வானத்தில்  செல்லத்
தொடங்கி;  உருகி   வீழ்ந்தன-  நெருப்பில்  வெந்து  உருத்
தெரியாது  உருகி  விழுந்தன; அம்பரம்  அம்பரத்து  ஏகல்
ஆற்றல 
-  மேகங்கள்  வானத்திலே  செல்ல  இயலாதனவாய்;
எரியும் மெய்யன- உடலெல்லாம் தீயில் வெந்து எரிய; இம்பரில்
உதிர்ந்தன
- தரையில் உதிர்ந்து விழுந்தன.
 

பம்புதல் - பரந்திருத்தல்;  ஒலித்தலுமாம்.  உம்பர்  - வானம.்
உருகி -  உருத்தெரியாதபடி  உருகிப்  போய். அம்பரம் - மேகம்;
வானம். இம்பர் - நிலம்.
 

(40)