பக்கம் எண் :

362யுத்த காண்டம் 

6629.

பட்டன படப் பட, படாத புட் குலம்,

சுட்டு வந்து எரிக் குலப் படலம் சுற்றலால்,

இட்டுழி அறிகில, இரியல் போவன,

முட்டை என்று எடுத்தன, வெளுத்த முத்து எலாம்.
 

சுட்டு வந்து  எரிக்குலப் படலம்  சுற்றலால்-  சுட்டுக்
கொண்டே   வந்த   நெருப்புப்   படலம்   எங்கும்   சூழ்ந்து
இருத்தலால்; பட்டன படப்பட-பறவைக் கூட்டம் தீயில் வெந்து
இறப்பன  இறந்து  கொண்டே  இருக்க;  படாத  புட்குலம்-
இறக்காத பறவைக்   கூட்டம்;   இட்டுழி  அறிகில-  புகையும்
நெருப்பும் சூழ்ந்திருத்தலால் தமது முட்டைகளை இட்ட இடத்தை
அறியாதனவாய்;  இரியல்   போவன-  பாதுகாப்பான  வேறு
இடத்துக்குச் செல்லுபவை; வெளுத்த முத்து எலாம்- வெண்மை
நிறமான  முத்துக்களை  எல்லாம்; முட்டை என்று  எடுத்தன-
முட்டை என நினைத்து எடுப்பனவாயின.
 

எரிக்குலப்படலம் - நெருப்பின் தொகுதி. இட்டுழி -(முட்டை)
இட்ட இடம்.
 

(41)
 

6630.

'வள்ளலை, பாவிகாள், "மனிசன்" என்று கொண்டு

எள்ளலுற்று அறைந்தனம்; எண் இலாம்' என

வெள்ளி வெண் பற்களைக் கிழித்து, விண் உறத்

துள்ளலுற்று இரிந்தன-குரங்கு சூழ்ந்தில.
 

பாவிகாள்- பாவிகளே! வள்ளலை மனிசன் என்று கொண்டு -
இராமபிரான்  மனிதன்  தானே  என  நினைத்து;   எள்ளலுற்று
அறைந்தனம்
  -  ஏளனமாகப்  பேசினோம்;  எண்   இலாம்-
இராமபிரானுடைய      பேராற்றலை      அறியும்   ஆராய்ச்சி
இல்லாதவரானோம்; என வெள்ளி வெண் பற்களைக் கிழித்து-
என்று கூறி  வெள்ளி  போன்ற வெண்மையான பற்களைக் காட்டி
இளித்துக் கொண்டு; குரங்கு சூழ்ந்தில- நீரில் வாழும் குரங்குகள்
அந்தக்   கடலைச்   சூழ்ந்து  கொண்டிருக்காமல்;   விண்உறத்
துள்ளலுற்று   இரிந்தன
-  வானத்தின்  மீது  துள்ளி  விலகிச்
செல்லலாயின.
 

புனலை,   கனலாகச்   செய்த   இராமபிரானைச்  சாதாரண
மனிதன்தானே   என்று  எண்ணி  இத்  துன்பத்தை அனுபவிக்க
நேர்ந்ததே  என்ற குரங்குகளின்  தவிப்புத் தெரிகிறது. குரங்குகள்
பற்களைக்  காட்டி  இளிப்பது  இயல்பு   என்பதால்  'பற்களைக்
கிழித்து' என்றார்.
 

(42)