| உறு சினம் உறப் பல உருவு கொண்டன, |
| குறுமுனி எனக் கடல் குடித்த-கூர்ங் கணை. |
| |
குறுமுனி எனக் கடல் குடித்த கூர்ங்கணை- குறுகிய வடிவினரான அகத்திய முனிவரைப் போல, கடல் நீரை எல்லாம் குடித்த (இராமபிரான் எய்த) கூரிய அம்புகள்; செறிவுறு செம்மைய- செறிவுற்று செம்மை வாய்ந்தன; தீயை ஓம்புவ- தீயை வளர்ப்பன; நெறியுறு செலவின- நெறியில் செல்லும் செலவினை உடையன; தவத்தின் நீண்டன- நெடியதவத்தை உடையன; உறுசினம் உற- மிக்க கோபம் கொண்டிருப்பதால்; பல உருவு கொண்டன- பல வடிவங்களைக் கொண்டன. |
குறுமுனி - அகத்தியர். ஓம்புதல். விரும்பிவளர்த்தல். உறுசினம். மிகுந்த கோபம். அம்புகள் குறுமுனிவரைப் போலக் கடல் நீரைக் குடித்தன எனக் கூறவந்தவர் குறுமுனிக்கும், அம்புக்கும் சிலேடைகூறினார். இது செம்மொழிச்சிலேடை. அகத்தியர்: செம்மை உடையவர்; வேள்வித்தீயை வளர்ப்பவர்; நன்னெறியில் செல்லுபவர்; நீண்டதவம் உடையவர்; சினத்தால் பல வடிவம் கொள்பவர்; கடலைக் குடித்தவர் அம்புகள்: தீயைப் போலச் செம்மை நிறம் உடையவை; தீயை வளர்ப்பவை; செலுத்தும் நெறியே செல்லுபவை; இராமன் கை தீண்ட தவம் உடையவை; கோபத்தால் பல வடிவம் கொள்பவை; கடல் நீரைப் பருகியவை. |
(45) |
6634. | மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால், |
| பூதலம் காவொடும் எரிந்த; பொன் மதில் |
| வேதலும், இலங்கையும், 'மீளப் போயின |
| தூதன் வந்தான்' எனத் துணுக்கம் கொண்டதால். |
| |
மோதல் அம் கனைகடல்- அலைமோதுகின்ற முழங்கு கின்ற கடலில் பற்றி; முருக்கும் தீயினால்- முழக்கத்துடன் எரிகின்ற நெருப்பினால்; பூதலம் காவொடும் எரிந்த- கடலைச் சூழ்ந்துள்ள நிலமெல்லாம் அங்குள்ள சோலைகளோடும் எரிந்தது; பொன் மதில் வேதலும்- இலங்கைக்கு அரணாக அமைந்துள்ள பொன்னாலான மதிலும் வெந்து போகவும்; இலங்கையும்- இலங்கையில் வாழும் அரக்கர்கள் எல்லாம்; போயின தூதன் மீளவந்தான் என - இங்கு வந்து இலங்கைக்கு எரியூட்டிப் போன தூதன் மீண்டும் வந்தான் என்று; துணுக்கம் கொண்டதால்- திடுக்கிட்டனர். |