பக்கம் எண் :

54   யுத்த காண்டம்

வீடணனைச் சமாதானப்படுத்த, வீடணன் தந்த வெற்றி ஈது என்று
கூறினான் என்பதை எடுத்துக்கொண்டாலும், இப்பாடலில் முதலில்
வரும் 'ஆடவர் திலக! நின்னால் அன்று' என்ற  சொற்களை ஏன்
பயன்படுத்த வேண்டும். இதைச் சொல்லாமலேகூட, வீடணன் தந்த
வென்றி ஈது' என்றுகூடச் சொல்லியிருக்கலாம். அதுவே, வீடணன்
மனப் புண்ணை ஆற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். அப்படி
என்றால் வெற்றி எக்களிப்போடு வரும் ஒருவனைப் பார்த்து, 'இந்த
வெற்றி    உன்னால்   அன்று'  என்று கூறுவதன் காரணம் ஏதோ
ஒன்றிருக்க வேண்டும்.   வேண்டுமென்றேதான் இராகவன் இதனை
இவ்வாறு கூறுகிறான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏனென்று
சிந்தித்ததில் கம்பனுடைய பாத்திரப் படைப்பில் உள்ளே   ஒளிந்து
நிற்கும் நுண்மைகள் வெளிப்படும்.
 

தொடக்கத்திலிருந்தே, இலக்குவன் என்ற பாத்திரத்தைக் கம்பன்
படைத்த      முறையைப்     பார்த்துக்கொண்டே   வந்தால், சில
அடிப்படைகளைப்  பார்க்க முடியும். பரம்பொருளின்    வடிவாகிய
இராமனிடத்து அன்பு பாராட்டுபவர்கள் பல   திறத்தவர்  என்பதை
அறியலாம். பரதன், குகன், அனுமன் என்று  மூவருடைய    அன்பு
(இராமபக்தி)    ஈடு    இணையற்றது.  அந்த அன்பில்  அகங்கார,
மமகாரங்கள்   அறவே    இல்லை.    சர்வ      பரித்தியாகத்தின்
அடிப்படையில் தோன்றிய அந்த அன்பு ஒரு  தனிப்பட்ட வகையைச்
சேர்ந்தது. இவர்கள் இராமனிடம்  செலுத்துகின்ற  அன்பில் தம்மைத்
தாமே   கரைத்துக்கொண்டவர்கள்.    அன்பே   வடிவான   மூவர்
வாழ்க்கையில்,    இவர்களையும்   இவர்கள் செலுத்தும் அன்பையும்
பிரித்துக்    காண்பது    கடினம். இந்த அடிப்படையை கண்ணப்பர்
புராணத்தில் சேக்கிழார், மிக விளக்கமாகத் தெளிவுபடுத்துகிறார்.
 

............................................................................யாக்கைத்
'தன்பரிசும், வினைஇரண்டும், சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம்புஆய்த் திரிவார்......." 

(பெ.பு.803)
 

இந்த அடிப்படையில் பார்த்தால், குகன் என்ற பாத்திரம், தான்
என்ற நினைவும், அந்நினைவால் உண்டாகக்கூடிய பாவ  புண்ணிய
விளைவுகளும், அந்தத் தரனுக்குரிய ஆணவம்,  கன்மம்,   மாயை
என்ற மும்மலங்களும் அற்றுப் போக, அன்பே வடிவாகக்  காட்சி
அளிக்கிறான் கங்கை வேடன்.