கனைகடல் - ஒலிக்கும் கடல். முருக்கும் - எரியும். கா - சோலை. பூதலம். நிலம். தூதன் - இராம தூதனாகிய அனுமான். துணுக்கம். கொள்ளுதல்- திடுக்கிடுதல். இலங்கை நகரம் முழுதும் பாழ்படத்தீயால் எரித்த அனுமனது செயல் போல, அம்புகளால் எழுந்த தீயின் செயலும் இருப்பதால் தூதன் வந்தான் என, இலங்கை துணுக்கம் கொண்டது என்றார். 'இலங்கை' இடவாகு பெயர்; இலங்கையில் வாழ்பவர்களை உணர்த்தும். |
(46) |
6635. | அருக்கனில் ஒளி விடும் ஆடகக் கிரி, |
| உருக்கு என உருகின, உதிரம் தோய்ந்தன, |
| முருக்கு எனச் சிவந்தன; முரிய வெந்தன, |
| கரிக் குவை நிகர்த்தன, பவளக் காடு எலாம். |
| |
அருக்கனில் ஒளிவிடும் ஆடகக் கிரி - சூரியனைப் போல ஒளிவீசும் பொன்னிற மலையான திரிகூடமலையானது; உருக்கு என உருகின- தீயால் வெந்து, அரக்கு உருக்குப் போல உருகலாயின; உதிரம் தோய்ந்தன- அதனுடன் இரத்தமும் தோய்ந்தமையால்; முருக் கெனச் சிவந்தன - முருக்க மலர் போலச் சிவந்து தோன்றின; பவளக் காடு எலாம்- கடலில் உள்ள பவளக்காடுகளெல்லாம்; முரிய வெந்தன- அழியும்படி வெந்து போயினவாய்; கரிக்குவை நிகர்த்தன- கரிக்குவியல்களை ஒத்திருந்தன. |
அருக்கன், சூரியன். ஆடகக் கிரி (இலங்கையின் நடுவே இருந்த திரிகூட மலை) உருக்கு. அரக்குருக்கு (அரக்குக் கட்டி) முருக்கு - முள் முருங்கை மலர். திரிகூட மலை மூன்று சிகரங்களைக் கொண்டது என்பதால் 'உருகின' எனப் பன்மையில் கூறினார். 'அருக்கனில்' என்பதன் இல், உருக்கு 'என' என்பதன் 'என' 'முருக் கென' என்பதன் 'என' என்பன உவமை உருபுகளாகும். பவளக்காடு - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. |
(47) |
6636. | பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும், |
| ஓர் இடத்து, உயிர் தரித்து, ஒதுங்ககிற்றில, |
| நீரிடைப் புகும்; அதின் நெருப்பு நன்று எனாப் |
| பாரிடைக் குதித்தன, பதைக்கும் மெய்யன. |
| |
பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்- பெருமையுடைய 'மலை' என்று கூறத்தக்க பெரிய மீன்களும்; ஓரிடத்து, உயிர் தரித்து ஒதுங்க கிற்றில- ஓரிடத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றி ஒதுங்கி |