| மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப, மீதுபோய், |
| வானவர் மலர் அயன் உலகின் வைகினார்? |
| |
மேல் நிமிர்ந்து எழுகனல் வெதுப்ப- கடலை விட்டு மேலே நிமிர்ந்து எழுந்த நெருப்பு வெதுப்புவதால் (பயந்து); வானவர் மீதுபோய்- விண்ணுலகில் வாழும் தேவர்கள் தாம் வாழும் விண்ணுலகுக்கும் மேலே சென்று; மலரயன் உலகின் வைகினார்- பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் தங்கலாயினர் என்றால்; ஏனையர் என்ன வேறுலகில் ஈண்டினார்- தேவரினும் ஏனையோராகிய மண்ணுலகில் வாழ்பவர்கள்; ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ- என்போர் செய்த செயல்களைச் சொல்ல வேண்டுமோ? |
ஈண்டினோர் - நிறைந்திருப்பவர். வேறுலகு - தேவருலகினும் வேறான மண்ணுலகு. |
(58) |
இராமன் சதுமுகன் கணை ஏவ-நிகழ்ந்த மாறுபாடுகள் |
6647. | 'இடுக்கு இனி எண்ணுவது என்னை? ஈண்டு இனி |
| முடுக்குவென் வருணனை' என்ன, மூண்டு எதிர் |
| தடுக்க அரும் வெகுளியான், சதுமுகன் படை |
| தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார். |
| |
இடுக்கு இனி எண்ணுவ தென்னை- இதனால் இனி வரப் போகும் துன்பங்களைப் பற்றி நினைப்பதால் என்ன பயன்?; ஈண்டு இனி முடுக்குவென் வருணனை என்ன- வருணனை இனி இங்கு விரைவில் வருமாறு செய்வேன் என்று; மூண்டு எதிர் தடுக்கரும் வெகுளியான்- பெருகி எழுகின்ற எதிர்த்து எவரும் தடுக்க இயலாத வெகுளியை உடைய இராமன்; சதுமுகன் படை தொடுத்தனன்- பிரமதேவனது கணையான (பிரம்மாஸ்திரத்தை வில்லில் தொடுத்து விடத் தொடங்கினான்; அமரரும் துணுக்கம் எய்தினார்- அதைக்கண்டு தேவர்களும் திடுக்கிட்டார்கள். |
இடுக்கு - துன்பம். முடுக்குதல் - விரைதல் மூண்டு - மேல் மேல் பெருகி தடுக்க அரும் வெகுளி - தடுப்பதற்கரிய கோபம். சதுமுகன்படை ஆற்றல் மிக்கது என்பதால் அதனால் நேரும் துன்பத்தை நினைத்துப் பயனென்ன? வருணன் விரைந்து வரவேண்டுமானால் சதுமுகன் படையை எய்வதே தக்கது என்பதால் 'இடுக்கினி எண்ணுவதென்னை' என்று இராமபிரான் கூறினான் எனலுமாம். |
(59) |