பக்கம் எண் :

55   யுத்த காண்டம்

இந்நிலையில் குகன் என்ற ஒருவன், இராமன் என்ற ஒருவன், அந்த
இராமனிடம் செலுத்தப்படும் அன்பு ஆகிய மூன்றும்  மறைந்துவிட,
முழுவதும் அன்புமயமாகவே காட்சி அளிப்பதைக் காணலாம். இந்த
விளக்கம் ஏனைய இரண்டு பாத்திரங்களாகிய பரதன், அனுமன் என்ற
இருவருக்கும் பொருந்துவதாகும்.
 

இதனெதிராக,    இலக்குவன்   இராமனிடம் செலுத்தும் அன்பு
பிறிதொரு    வகையைச்    சேர்ந்ததாகும்.   இந்த அன்பில் 'தான்'
மறைவதேயில்லை. 'நான் அன்பு செய்கிறேன்'   என்ற   எண்ணமும்
மாறுவதில்லை.    அதன்   பயனாக என்னால் அன்பு செய்யப்படும்
பொருளுக்கு   நான்  உதவி செய்கிறேன், பணி புரிகின்றேன்  என்ற
எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். இராமனுக்கு முடி    இல்லை
என்று      தெரிந்தவுடன்   இலக்குவன்   பேசியதையும்,  செய்யத்
துணிந்ததையும் நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல, பரதனைத்
தவறாக உணர்ந்து இராமனிடம்    பேசியதையும் நினைவில் கொள்ள
வேண்டும்.     இவ்விரண்டுமே    இராமன்மாட்டுக்       கொண்ட
அன்பினால்தான் என்பது உண்மை  என்றாலும்,    அந்த  அன்பைக்
கீறிப்பார்த்தால், அதனடியில் 'நான்' என்பது தலைதூக்கி நிற்கும். இந்த
இரண்டு  இடங்களிலும், இராமன் வருத்தமாகவும், கேலியாகவும் பேசி,
இலக்குவனின்    தன்     முனைப்பைத்  தட்டிவிடுவதை அந்தந்தப்
பகுதிகளில் கம்பன் நுண்மையாகக் கூறியிருப்பதைக் காணலாம்.
 

இத்துணை    நடந்தும்,    இலக்குவன்  திருந்திவிட்டான் என்று
கூறுவதற்கில்லை. தன்முனைப்பால் ஓரளவு வளர்ந்து 'தானே   அவன்'
என்று நினைக்கும் நிலையை எட்டிவிடுகின்ற ஒரு  சூழ்நிலையை முதற்
போர் புரி படலத்தில் கம்பன் அற்புதமாகப் படைத்துக்காட்டுகிறான்.
 

முதற் போரிலேயே  இலக்குவனின் பேராற்றலைக் கண்டு வியந்த
இராவணன், இலக்குவனை    முடிக்கக் கருதி, அயன் கொடுத்த வேற்
படையை    இலக்குவன்மேல்    ஏவ,    இலக்குவன்    மண்ணில்
சாய்ந்துவிடுகிறான்.    அப்படை    இலக்குவனைக் கொல்லவில்லை
என்பதை  அறிந்த   இராவணன் அவனைத் தூக்கிச் செல்ல விரும்பி
இலக்குவன் பக்கத்தில் வந்து தன்