இராவணன் முயற்சி பலியாமல் போனபொழுது, அனுமன் சேயை எடுக்கும் தாய்போல் இலக்குவனை எடுத்துச் சென்றான் என்று கவிஞன் பேசுவது இக்கருத்தை வலியுறுத்துகிறது. அனுமன் பிறந்தது முதலே மாதர் நலம் பேணாதவனாக, நைட்டிக பிரம்மச்சாரியாக இறைவன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் நினையாதவனாக வாழ்பவன் அல்லவா? எனவே, அனுமன் எளிதாக இலக்குவனைத் தூக்கிச் சென்றான் என்று கவிஞன் கூறுவது பொருத்த முடையதே ஆகும். பதினான்கு ஆண்டு பிரம்மச்சரியத்தை நைட்டிக பிரம்மச்சரியம் எளிதாகத் தூக்கியதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், கயிலையைத் தூக்கிய இருபது கைகளாலும் இலக்குவனைத் தூக்க முடியாமல் போனதற்குக் காரணத்தைக் கவிஞன் பின்வரும் பாடலில் வேறுவிதமாகக் கூறுவது சிந்திக்கத் தக்கதாகும். |