பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 395

கடல்  கடந்து  செல்ல  அரிய  அகலமும்,  ஆழமும் உடைய
தென்பதனை 'செறிதிரைக்கடல்' என்பதுணர்த்தும். 'பணி உனக்கு'
என சுக்கிரீவன்  கூறாது, தன்னையும் உட்படுத்தி 'பணி  நமக்கு'
என்றது கருதத் தக்கது. நளனும் வானரன் ஆதலால் 'நம்' என்ற
உளப்பாட்டுத்தன்மைச்  சொல்   வந்தது.  பிறர்  எவரும் குறை
கூறிப் பழிப்பதற்கு இயலாத தொழில்  திறமை உடையவன் நளன்
என்பது தோன்ற  'நிந்தனை   இலாதவன்"  என்றார். நேர்தல் -
உடன்படுதல்.
 

(2)
 

6676.

'காரியம் கடலினை அடைத்துக் கட்டலே;
சூரியன் காதல! சொல்லி என் பல;
மேருவும் அணுவும் ஓர் வேறு உறாவகை

ஏர்வுற இயற்றுவென்; கொணர்தி' என்றனன்.

 

சூரியன் காதல- சூரிய  குமாரனே!; காரியம்  கடலினை
அடைத்துக் கட்டலே
- நான் செய்ய வேண்டிய காரியம் இந்தக்
கடலை அடைத்து அணை கட்டுவதுதானே; சொல்லி என் பல-
பலவும்   கூறி  என்ன   பயன்?; மேருவும்   அணுவும்   ஓர்
வேறுறாவகை
- மிகப் பெரிய மேருமலையும் மிகச் சிறிய அணுவும்
வேறாகத் தோன்றாதபடி; ஏர்வுற இயற்றுவென்- அழகு பொருந்த
அணையைக்  கட்டுவேன்; கொணர்தி   என்றனன் -  அணை
கட்டுதற்கு உரியனவான  மலை முதலியவைகளைக் கொண்டு வரச்
செய் என்றான்.
 

அணைகட்டுவதை   எளிமையான  தொரு   செயல்   என்று
தோன்றும்படி 'காரியம்  கடலினை அடைத்துக்கட்டலே'  என்றான்
'இவ்வளவுதானே செய்து   முடிப்பேன்'  என்பது  குறிப்பு.  மேரு
மலை மிகப் பெரியது அணு மிகச் சிறியது என்றாலும் இரண்டையும்
சேர்த்து ஒன்று போலத் தோன்றும் படி இயற்றுதல்  போல  அழகு
பொருந்த     அணையைக்   கட்டுவேன்   என்பான்   'மேருவும்
அணுவுமோர் வேறுறா வகை ஏர்வுற இயற்றுவன்' என்றான்.  ஏர் -
அழகு. வேறு உறாவகை - வேறாகத் தோன்றாதபடி.
 

(3)
 

சாம்பன் அணைகட்ட வருமாறு சேனையை அழைத்தல்
 

6677.

'இளவலும், இறைவனும், இலங்கை வேந்தனும்,
அளவு அறு நம் குலத்து அரசும், அல்லவர்
வளைதரும் கருங் கடல் அடைக்க வம்' எனத்
தளம் மலி சேனையைச் சாம்பன் சாற்றினான்.