பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 409

வள்ளியோர்  பிறருக்கு  உதவ  வேண்டும்  என்று  நினைத்துத்
தரவில்லை  என்றாலும், அவர்களது நல்ல செல்வம் பயன் மரம்
போல,  ஊருணி   நீர்போல, மருந்தாகித் தப்பா  மரம் போலப்
பிறருக்கு   உதவும்    தன்மையுடையது     என்ற     கருத்து
விளக்கப்பட்டுள்ளது.
 

(24)
 

6698.

மூசு எரி பிறக்க, மீக்கொண்டு, இறக்கிய

முடுக்கம்தன்னால்,

கோய் சொரி நறவம் என்னத் தண் புனல் உகுக்கும்

குன்றின்

வேய் சொரி முத்துக்கு, அம்மா விருந்து

செய்திருந்த-.ஈண்ட

வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம்.
 

மூசு எரி  பிறக்க-  செறிந்த   நெருப்புத்   தோன்றுமாறு;
மீக்கொண்டு  இறக்கிய  முடுக்கம் தன்னால்- (வானரங்கள்)
தலையின்மேல்  தாங்கிக்  கொண்டு   வந்து   கடலில்   வீசிய
வேகத்தால்;   கோய்  சொரிநறவம்  என்ன-   கள்முகக்கும்
பாத்திரத்திலிருந்து  சொரியும்  கள்ளைப்  போல்; தண்  புனல்
உகுக்கும்   குன்றின்
-   குளிர்ந்த   தண்ணீரைச்   சொரியும்
மலையினது; வேய்  சொரி முத்துக்கு- மூங்கில்கள் சொரிகின்ற
முத்துக்களுக்கு;  ஈண்ட  வாய்   சொரி    இப்பியோடும்-
நெருங்கிய இப்பிமீன்களின் வாயிலிருந்து சொரிந்த முத்துக்களும்;
வலம்புரி  உமிழ்ந்த  முத்தம்- வலம்புரிச் சங்குகள் உமிழ்ந்த
முத்துக்களும்; விருந்து செய்திருந்த- விருந்து வைத்தது போல்
காணப்பட்டன.
 

மூசுஎரி  - செறிந்த  நெருப்பு.  மீக்கொண்டு  -  தலையின்
மேல்தாங்கிக்  கொண்டு   வந்து. முடுக்கம் - வேகம்.  கோய் -
கள்முகக்கும் பாத்திரம். அம்மா- வியப்பிடைச் சொல். குன்றுகள்
அருவி நீரைச் சொரிவதற்கு, கள்  முகக்கும்  பாத்திரத்திலிருந்து
ஒழுகும் கள் உவமையாகும். வானரங்கள் மலைகளைத் தலையில்
தூக்கி வந்து - தீப் பிறக்கும்படி கடலில் போட்ட வேகத்தினால்
மலைகளில் இருந்து அருவி நீர் பெருகியது என்றார்.
 

(25)
 

கலிவிருத்தம்
 

6699.

விண்தலம் தொடு மால் வரை வேரொடும்
கொண்டு, அலம் கொள வீரர் குவித்தலால்,
திண் தலம், கடல், ஆனது; நீர் செல,
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே.