தக்கது. 'துவலையசால்' ஆல் என்ற மூன்றாவதனுருபு 'ஓடு' என்ற பொருளில் வந்தது. |
(37) |
6711. | நீலன் இட்ட நெடு வரை நீள் நில |
| மூலம் முட்டலின், மொய் புனல் கைம்மிக, |
| கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால், |
| ஓலமிட்டு எழுந்து ஓடி, உலகு எலாம். |
| |
நீலன் இட்ட நெடுவரை- அக்கினி தேவனது அம்சமான நீலன் என்ற வானரத் தலைவன் கடலில் இட்ட நீண்ட மலை; நீள் நிலமூலம் முட்டலின்- நீண்ட இந்தப் பூமியின் அடிவரை (பாதாளம்) சென்று முட்டுவதால்; மொய்புனல் கைம்மிக- மிகுந்த தண்ணீர் எல்லைகடந்து செல்வதால்; கூலம் இட்டிய ஆர்கலி- கரை சிறியதாகிய அக்கடல்; ஓலம் இட்டு எழுந்து ஓடி- முழக்கமிட்டுக் கொண்டு மேலெழுந்து ஓடி; உலகு எலாம் கோத்தது- உலகமெல்லாம் சென்று பாய்ந்தது. |
நீலன் - வானரத் தலைவன் ஒருவன்; அணை கட்டியவன். நிலமூலம் - நிலத்தின் அடிப்பகுதி (பாதாளம்). முட்டுதல் - தாக்குதல். கைம்மிக - எல்லைகடந்து செல்ல கூலம் - கரை இட்டிய - சிறிதான ஆர்கலி - கடல் (ஒலித்துக் கொண்டே இருப்பது) |
(38) |
6712. | ஒருவன் ஆயிரம் யோசனை ஓங்கிய |
| அருவி மால் வரை விட்டு எறிந்து ஆர்த்தலால், |
| மருவு வான் கொடி மாடஇலங்கையில் |
| தெரு எலாம் புக்கு உலாய, தெண்ணீர்அரோ.* |
| |
ஒருவன் ஆயிரம் யோசனை ஓங்கிய- வானர வீரன் ஒருவன் ஆயிரம் யோசனை தூரம் உயர்ந்துள்ளதாகிய; அருவி மால்வரை விட்டு எறிந்து ஆர்த்தலால்- அருவிகளையுடைய பெரிய கரியமலையை கடலில் எறிந்து விட்டு, ஆரவாரித்ததால்; மருவுவான் கொடி மாட இலங்கையில்- வானளாவிய கொடிகளை உடைய மாடங்களைக் கொண்ட இலங்கை மாநகரின்; தெருவெலாம் தெண்ணீர் புக்கு உலாய- தெருக்களில் எல்லாம் தெளிந்த கடல்நீர் புகுந்து உலாவியது. |
மால் - கரிய (பெரிய எனலுமாம்) இராவணன் ஆணைக்கு அஞ்சிக் கரை கடவாதிருந்த கடல் நகருக்குள் புகுந்து அச்சமின்றித் தெருக்களில் உலாவியது என்பது தோன்ற 'உலாய' என்றது ஓர் நயம். |
(39) |