6713. | மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற |
| உயர்ந்து முட்டி விழ, எழுந்து ஓத நீர் |
| தியந்தம் முட்ட, திசை நிலை யானையும், |
| பெயர்ந்து விட்டவை, யாவும் பிளிறுவ. |
| |
மயிந்தன் இட்ட நெடு வரை- மயிந்தன் என்ற வானரத் தலைவன் கடலில் விட்டெறிந்த பெரிய மலை; வான் உற உயர்ந்து முட்டி விழ - வானத்திலே சென்று உயர்ந்து தாக்கிப் பின் கீழே விழ அதனால்; எழுந்த ஓத நீர்- மேலே பொங்கி எழுந்த கடல்நீர்; தியந்தம் முட்ட - திசைகளின் எல்லையிலே சென்றுதாக்க; திசைநிலையானையும்- எட்டுத் திசைகளிலும் நிலைத்து நிற்கும் திக்கு யானைகளும் கூட; பெயர்ந்து விட்டு அவை யாவும் பிளிறுவ- தாம் வாழும் திசையிலிருந்து இடம் பெயர்ந்து விட்டு, அச்சத்தால் பிளிறின. |
தியந்தம் - திக் + அந்தம் (திசையின் எல்லையான இடம்). ஓதநீர் - கடல் நீர். திசை நிலையானை - திக்கு யானை. மயிந்தன் கடலில் எறிந்த பெரிய மலை வானத்திலே மோதிப்பின் கீழே விழுந்தது என்பதை 'வான் உற உயர்ந்து முட்டி விழ' என்றார். திக்குகளில் நிலைத்து நின்ற யானைகளும் இடம் பெயர்ந்து, அஞ்சிப்பிளிறலாயின என்பதை 'பெயர்ந்து விட்டு அவை யாவும் பிளிறுவ' என்றார். |
(40) |
6714. | இலக்கு வன் சரம்ஆயினும், ஏன்று எதிர் |
| விலக்கினால், விலங்காத விலங்கலால், |
| அலக்கண் எய்த,-அமுது எழ ஆழியைக் |
| கலக்கினான் மகன்-மீளக் கலக்கினான். |
| |
இலக்குவன் சரம் ஆயினும் - இலக்குவனது அம்பு என்றாலும்; ஏன்று எதிர் விலக்கினால்- போரை ஏற்று எதிர்த்து நின்று விலக்கினால்; விலங்காத விலங்கலால்- சிறிதும் விலகாத மலையினால்; அமுதெழ ஆழியைக் கலக்கினான் மகன்- அமுதம் எழும்படி பாற்கடலைக் கலக்கியவனான வாலியின் மகன் அங்கதன்; அலக்கண் எய்த - கடல் துன்பம் எய்தும்படி; மீளக் கலக்கினான்- மீண்டும் கடலைக் கலக்குவானானான். |
'இலக்குவன் சரம்' என்பதற்கு 'இலக்கு வன்சரமாயினும்' என்று பிரித்து குறித்த இலக்கில் சென்று தாக்குவதற்குரிய வலிய அம்பாயினும் என்று பொருள் கூறினும் பொருந்தும். ஏன்று - ஏற்று விலங்காத விலங்கல் - விலகாத மலையாகும் ஆழியை அமுதெழக்கலக்கினான் |