பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 419

இன்னம் எழும் எனும்  ஆசையால்-  (முன்பு  பாற்கடலை
மந்தர மலையைக் கொண்டு  கடைந்ததால் எழுந்த அமுதத்தைப்
போல) இன்னும்  அமுதம்  எழக்  கூடும்   என்ற  ஆசையால்;
வானவர் துள்ளினார்- தேவர்கள் மகிழ்ந்து துள்ளலாயினர்.
 

குமுதன் - வானரத்தலைவருள் ஒருவன். குலவரை - சிறந்த
மலை. திமிதம் - திமிதம் என்று ஒலித்துக்  கூத்தாடுதல்  துமி -
துளி.  இச்   சொல்   இப்   பொருளில்    உலக    வழக்கில்
வழங்குவதாகக்  கூறிய   கம்பருக்கு, கலை  மகளே   ஆய்ச்சி
வடிவில் வந்து  தயிர்  கடைந்து   கொண்டிருக்க,   பிள்ளைகள்
நெருங்கி வர 'துமி தெறிக்கும் தூரப் போங்கள்" என்று கூறியதாக
ஒரு கதை வழங்குகிறது.
 

(43)
 

6717.

கன சினத்து உருமின் கடுங் கார் வரை
பனசன் இட்டன யாவும் பரிக்கிலன்,
மன சினத்த அனந்தனும், வாழ்வு இகந்து,
அனசனத்தொழில் மேற்கொள்வது ஆயினான்.
 

கனசினத்து  உருமின் -  மிகுந்த கோபத்துடன் இடியைப்
போல் முழங்கி; கடும்   கார்  வரை-  கடிய   பெரிய   கரிய
மலைகளை; பனசன் இட்டன யாவும்- 'பனசன்' என்ற வானரத்
தலைவன்  கடலில்  எறிய அவை அனைத்தையும்; பரிக்கிலன்-
தாங்க இயலாதவனாய்;  மன சினத்து அனந்தனும்- மனத்திலே
மிக்க சினத்தை உடையவனான  ஆதிசேடனும்; வாழ்வு இகந்து-
பாரத்தைச் சுமந்து வாழ்வதை விட்டு  (உயிர்துறக்க);  அனசனத்
தொழில்
- உணவு   உண்ணாதிருத்தலாகிய   தொழிலை; மேற்
கொள்வதாயினான்
- மேற்கொள்ளலானான்.
 

பனசன் - வானரத் தலைவன் ஒருவன்.  பரிக்கிலன் -  தாங்க
இயலாதவனாய் அனந்தன் - ஆதிசேடன் வாழ்விகந்து - வாழ்வை
விட்டு அன் + அசனம் = அனசனம்- உண்ணாதிருத்தல் அசனம் -
உணவு     கோவைப்பகுதியில்     கிராமப்புறங்களில்    பட்டிப்
பொங்கலன்று 'அசனமுண்ணுபட்டியாரே' என்று கூறி  மாடுகளுக்கு
உணவுண்ணச் செய்தலுண்டு'  என்பதால்  அசனம் - உணவு என்ற
பொருள் கொண்ட சொல்லாக வழங்குவது புலனாகும். ஆதிசேடன்
கோபம்    மிக்கவன்   என்பதால்   'மன   சினத்து   அனந்தன்'
என்றார்; இலக்குவன்   சீற்ற   முற்ற   போது  "தனது  ஆதியின்
மூர்த்தி ஒத்தான்" என்றது (கம்ப. 1717) நினைவு கூரத்தக்கது.
 

(44)