| அலை நெடுங் கடல் அன்றியும், ஆண்டுத் தம் |
| தலையின்மேலும் ஒர் சேது தருவ போன்ம். |
| |
மலை சுமந்து வருவன வானரம்- அணைகட்டுவதற்காக மலைகளைச் சுமந்து கொண்டு வருவனவாகிய வானரங்கள்; செல்ல நிறம் பெறா - செல்லுதற்கு அங்கு இடமில்லாமையால்; நிலையில் நின்றன- மலைகளைச் சுமந்து கொண்டு அசையாமல் நின்ற தோற்றம்; அலை நெடுங்கடல் அன்றியும்- அலைகளை உடைய பெரிய கடலே அல்லாது; ஆண்டுத் தம் தலையின் மேலும்- அங்கே அந்த வானரங்களின் தலைகளின் மீதும்; ஒரு சேது தருவ போன்ம்- ஒரு அணை அமைந்தது போலக் காணப்பட்டது. |
போன்ம் - 'ம்' மகரக் குறுக்கம். |
(49) |
6723. | பருத்த மால் வரை ஏந்திய பல் படை |
| நிரைத்தலின், சில செல்ல நிலம் பெறா, |
| கரத்தின் ஏந்திய கார் வரை, கண் அகன் |
| சிரத்தின் மேற்கொண்டு, நீந்தின சென்றவால். |
| |
பருத்த மால் வரை ஏந்திய- பெரிய கருமை நிறமான மலைகளைக் கரங்களில் ஏந்திய; பல்படை நிரைத்தலின்- பல பேர் கொண்ட வானரப் படைவரிசையாக நிற்பதனால்; சில செல்ல நிலம் பெறா- மலைகளைத் தாங்கி வந்த சில வானரங்கள் செல்லுவதற்கு இடமில்லாததால்; கரத்தின் ஏந்திய கார் வரை- கைகளில் ஏந்திக் கொண்டிருந்த கரிய மலைகளை; கண் அகன் சிரத்தின் மேற்கொண்டு- இடமகன்ற தலையின் மீது சுமந்து கொண்டு; நீந்தின சென்றவால்- நீந்திக் கொண்டு செல்வனவாயின. |
நிரைத்தல் - வரிசையாக நிற்றல். நிலம் பெறா - இடம் பெறாமையால். கண் அகன்சிரம் - இடமகன்ற சிரம். |
(50) |
6724. | ஆய்ந்து நீளம், அரிது சுமந்தன |
| ஓய்ந்த கால, பசியின் உலர்ந்தன, |
| ஏந்து மால் வரை வைத்து, அவற்று ஈண்டு தேன் |
| மாந்தி மாந்தி, மறந்து, துயின்றவால். |
| |
அரிது சுமந்தன- மலைகளைக் கடுமையாக முயன்று சுமந்து வந்த வானரங்கள்; நீளம் ஆய்ந்து- போக வேண்டிய தூரத்தை |