ஆராய்ந்து பார்த்து; ஓய்ந்த கால- கால்கள் ஓய்ந்து போனவையாய்; பசியின் உலர்ந்தன- பசியினால் வாடியனவாய்; ஏந்து மால் வரை வைத்து- கைகளில் ஏந்திய பெரிய மலைகளைக் கீழே வைத்து விட்டு; அவற்று ஈண்டு தேன் மாந்திமாந்தி- அம்மலையிலே உள்ளதேனை மிகுதியாக உண்டு; மறந்து துயின்ற- போக வேண்டிய காரியத்தை மறந்து போய் தூங்கலாயின. |
உலர்ந்தன - வாடினவாக. அவற்று ஈண்டு தேன் - அவைகளில் நிறைந்துள்ள தேனை. மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏறப் புகுந்த குரங்கு, பக்கத்துப் பாறையில் இருந்த தேனைக் குடித்து உறங்கி விடுவதாக கபிலர் (அகநா.2) காட்டிய காட்சியைக் கம்பர் நினைந்தார் போலும். |
(51) |
6725. | போதல் செய்குநரும், புகுவார்களும், |
| மாதிரம்தொறும் வானர வீரர்கள், |
| 'சேது எத்துணைச் சென்றது?' என்பார் சிலர்; |
| 'பாதி சென்றது' எனப் பகர்வார் சிலர். |
| |
போதல் செய்குநரும்- மலைகளை மீண்டும் கொண்டு வரச் செல்பவர்களும்; புகுவார்களும்- அணைகட்ட மலைகளைக் கொண்டு வருபவர்களுமாகிய; மாதிரம் தொறும் வானர வீரர்கள்- எல்லாத் திசைகளிலும் நிறைந்துள்ள வானர வீரர்களுக்குள்; சேது எத்துணை சென்றது என்பார் சிலர்- அணை எத்தனை தூரம் சென்றுள்ளது என்று வினவுவார் சிலர்; பாதி சென்றது எனப் பகர்வார் சிலர்- அவ்வாறு வினவியர்களுக்கு விடையாக பாதி அளவு சென்றுள்ளது என்று கூறுவார் சிலர். |
போதல் செய்குநர் - செல்லுபவர். புகுவார் - வருபவர். மாதிரம் - திசை எத்துணை - எந்த அளவு. புகுவார் வினவ, போதச் செய்கின்றார் விடை பகர்ந்தனர் என்க. |
(52) |
மலைகளும் மரங்களும் கடலில் மூழ்கும் நிகழ்ச்சிகள் |
6726. | குறைவு இல் குங்குமமும், குகைத் தேன்களும், |
| நிறை மலர்க் குலமும், நிறைந்து எங்கணும், |
| துறைதொறும் கிரி தூக்கின தோய்தலால், |
| நறை நெடுங் கடல் ஒத்தது, நாம நீர். |