| விழுந்த பல் மணியின் ஒளி, மீமிசை |
| எழுந்த எங்கணும். இந்திர வில்லினே. |
| |
கொழுந்துடைப் பவளக் கொடியின் குலம்- கொழுந்துகளை உடைய பவளக் கொடிகளின் கூட்டம்; அழுந்த உய்த்த அடுக்கல்- கடலின் உள்ளே அழுந்தும்படி எறிந்த மலைகள்; தகர்ந்து அயல் விழுந்த பல்மணியின் ஒளி- உடைந்து போய் அதனால் பக்கங்களில் விழுந்த பல மணிகளின் ஒளிக் கதிர்கள்; இந்திரவில்லின்- வானத்திலே காணப்படும் இந்திரவில்லைப் போல; மீமிசை எங்கணும் எழுந்த- மேலே எவ்விடத்தும் காணப்பட்டன. |
அழுந்த - கடலில் அழுந்தும்படி. உய்த்த - எறிந்த. அடுக்கல்- மலை. இந்திரவில் - வானவில். வானவில்லின் பல நிறங்களைப் போலப் பலமணிகளின் ஒளிக்கற்றைகள் ஒளிர்ந்தன. |
(55) |
6729. | பழுமரம் பறிக்க, பறவைக் குலம், |
| தழுவி நின்று ஒருவன் தனித் தாங்குவான் |
| விழுதலும், புகல் வேற்று இடம் இன்மையால், |
| அழுது அரற்றும் கிளை என ஆனவால். |
| |
பழுமரம் பறிக்க- வானர வீரர்கள் அணை கட்ட ஆல் மரங்களை வேரொடு பறித்து விடுவதால்; பறவைக்குலம்- அந்த மரங்களை வாழுமிடமாக உடைய பறவைக்கூட்டம்; தழுவி நின்று ஒருவன்- ஒருவனாகவே கிளைகளைத் தழுவியிருந்து; தனித் தாங்குவான் விழுதலும்- தனியாகத் தாங்கி ஆதரிப்பவன் இறந்துபட; புகல் வேற்றிடம் இன்மையால்- வேறு புகலிடம் இல்லாமையால்; அழுது அரற்றும்கிளை என ஆன- அழுது புலம்பும் கிளைஞரைப் போலாயின. |
பழுமரம் - ஆலமரம். உவமையணி அழுது அரற்றும்கிளை உவமானம். பறவைக்குலம் - உவமேயம். |
(56) |
6730. | 'தர வலோம், மலர்' என்று, உயிர் தாங்கிய |
| மரம் எலாம் கடல் வீழ்தலும், வண்டு எலாம், |
| கரவு இலாளர் விழ, களைகண் இலா |
| இரவலாளரின், எங்கும் இரிந்தவால். |