பக்கம் எண் :

470யுத்த காண்டம் 

ஏகு"  என்றான்  வீடணன்,  "நன்று  நன்று  நம் மந்திரம் நன்று"
என்பது  இகழ்ச்சிக்  குறிப்பு. பகைவர்  அழிவு பேச வேண்டிய
நம்  மந்திர  சபை, பகைவர் பெருமை பேச  அமைந்த ஒன்றாக
மாறியுள்ளது கண்டு  அவன் உள்ளத் தெழுந்த சினத்தால்  வந்த
இகழ்ச்சி இது.
 

(48)
 

சேனைத் தலைவன் கூறுதல்
 

6794.

'ஈனமேகொல், இதம்?' என எண்ணுறா,

மோனம் ஆகி இருந்தனன், முற்றினான்.

ஆன காலை, அடியின் இறைஞ்சிய

சேனை நாதன் இனையன செப்பினான்:
 

முற்றினான் இதம் ஈனமே கொல்?- (இவ்வாறு இராவணன்
வெகுண்டுரைத்ததைக்  கேட்ட)  ஆண்டும்  அநுபவமும் பண்பும்
முற்றிய மாலியவான், நல்லது கூறுதல் கூட (இங்கு) இழிவாகுமோ?
என்று   வருந்தி;   மோனமாகி    இருந்தனன்  -   பேசாது
ஒடுங்கியிருந்தான்; ஆன   காலை  -  அப்போது;   அடியின்
இறைஞ்சிய   சேனை   நாதன் 
-  (இராவணன்)   அடிகளை
வணங்கியவனான   படைத்தலைவன்    (பிரகத்தன்);  இனையன
கூறினான்
- பின்வருவனவற்றைக் கூறினான்.
 

கொல்  -  ஐயப்  பொருள் தந்தது. இதம் - நன்மை.  இதம்
எல்லாம்  இராவணனுக்கு  ஈனம்  என்பதால்,  ஈனம்  எல்லாம்
அவனுக்கு  இதம்  ஆகும் என்பது,  அவன்   படைத்தலைவன்
கூறவிருக்கும்    ஈனங்களை   அவன்    விரும்பிக்   கேட்கத்
தொடங்குவதால் உணர்த்தினார்.
 

(49)
 

6795.

'கண்மை இந் நகர் வேலை கடந்த அத்

திண்மை ஒன்றும் அலால், திசை காவலர்

எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அவ்

உண்மை ஒன்றும் உணர்ந்திலைபோல்!' என்றான்.
 

ஐயா! - ஐயனே! ; கண்மை- கண்ணுக்கு நேராக; இந்நகர்
வேலை கடந்த
- இவ்விலங்கை மாநகரைச் சுற்றியுள்ள கடலைக்
கடந்த;அத்திண்மை ஒன்றும் அலால்- அந்த வல்லமைஒன்றே
(தம் கண்கட்குப் படுகின்றதே) யன்றி;திசை காவலர் எண்மரும்
- எட்டுத்   திக்குப்   பாலகரும்; இவற்கு - நம் வேந்தனாகிய
இவனுக்கு;  ஏவல் செய்கின்ற -  குற்றேவல்  புரிகின்ற; அவ்
உண்மை  ஒன்றும்
- அந்தப்    பேருண்மை   ஒன்றினையும்;
உணர்ந்திலைபோல்- (நீ) உணரவில்லை போலும்; என்றான்.