பக்கம் எண் :

474யுத்த காண்டம் 

உள்ளவாறும், உரைமின்' என்றான்-உயிர்
கொள்ள வாய் வெருவும் கொடுங் கூற்று அனான்.
 

உயிர்  கொள்ள  வாய் வெருவும்- உயிர்களைக் கொள்ள
விரும்பி, வாயைக் கடிக்கும்; கொடுங் கூற்று அனான் - கொடிய
கூற்றுவனைப் போன்ற இராவணன்; 'வாரி வெள்ள விரிவொடு -
"கடல் வெள்ளம் போன்று பரந்த வானரச் சேனையின் விரிவோடு;
அவ்வீடணத்  தள்ளவாரி   நிலைமையும்  - அந்த வீடணன்
என்னும் (போருக்கஞ்சி ஒளிந்த) சோம்பேறியின் நிலைமையையும்;
தாபதர் உள்ளவாறும் - தவம் செய்வோர் வேடம் தரிந்த இராம
இலக்குவர் உள்ள திறனையும்; உரைமின்' என்றான்- (எனக்குக்)
கூறுங்கள்" என்று கூறினான்.
 

வீடணன்,  போர்க்கு அஞ்சி இராமனிடம் ஓடியவன், என்பது
இராவணனின்  நினைவு  ஆதலின்,  "அவ்வீடணத்   தள்ளவாரி"
என்றான்.  தள்ள  பாரு -  எனுந்  தொடர்  போருக்கஞ்சுபவன்
எனக்   கன்னடத்தில்    இன்றும்    வழங்குகிறது     என்பர்.
போருக்கஞ்சிச்   சோம்பலில்   ஏறியவன்   ஆதலின், தமிழில்
தள்ளவாரி  என்பது  சோம்பேறியைக்  குறிப்பதாயிற்று "தூங்கல், 
அசைதல், அலசுதல், சோம்பே, சடமடி தள்ள  வாரமும் தருமே"
என்பது பிங்கலந்தை. இன்று "தெல்லவாரி" என்பது நாட்டுவழக்கு. 
 

(56)
 

6802.

என்னச் சாரர் இசைத்தனர், வேலையைக்
கன்னல் ஒன்றில் கடந்து, கவிக் குலம்
துன்னு பாசறைச் சூழல்கள் தோறுமே
அன்னர் ஆகி, அரிதின் அடைந்தனம்.*
 

என்ன - இவ்வாறு  (இராவணன்) கூற; சாரர்- சுக சாரணர்
எனும்  ஒற்றர்களும்; வேலையை - கடலை; கன்னல் ஒன்றில்
கடந்து- ஒரு நாழிகைப் பொழுதில் கடந்து சென்று; கவிக்குலம்
துன்னு   பாசறைச்   சூழல்கள்  தோறும்
- வானரக்கூட்டம்
நெருங்கியுள்ள  பாசறைச்  சுற்றுப்  புறங்கள்  தோறும்; அன்னர்
ஆகி 
- (அக்குரங்குகளின் வடிவத்தினையே எடுத்துக்கொண்டு)
அவர்களே  ஆகி;  அரிதின்  அடைந்தனம்- (மிக) அரிதாக
அவர்களையடைந்தோம் (என்று); இசைத்தனர் - கூறினர்.
 

கன்னல்-வட்டில். அதனால் அளக்கும் நாழிகைப் பொழுதைக்
குறித்து நின்றது.

(57)