எல்லை நோக்கவும் - (இராமன் தன்) எல்லையிலே வந்து தன்னை நோக்கி வரம் கிடக்கவும்; எய்திலதாம் எனும் - (கடல்) வந்து உதவவில்லை என்கின்ற; சொல்லை நோக்கிய மானுடன் - (பழி) மொழியைக் கருதிய (இராமன் ஆகிய) மானுடன்; தோள் எனும் கல்லை நோக்கி - தனது தோள்கள் என்னும் மலைகளைப் பார்த்து; கணைகளை நோக்கி - (அம்பறாத் தூணியில் உள்ள) அம்புகளைப் பார்த்து; தன் வில்லை நோக்கவும்- தன்னுடைய (தோளிற் கிடந்த) வில்லினை நோக்கிய அளவில்; வேலை வெந்தது - கடல் எரிந்தது. |
மதியாது கிடந்த கடலின் மேல் வெகுளாது போயின் உலகு பழிக்கும்; அடைக்கல தருமம் ஆபத்தைச் சந்திக்கும், என வெகுண்டான். ஆதலின் "எல்லை நோக்கியும் எய்திலதாம்" எனும் சொல்லை நோக்கிய மானுடன்" என்றார். கல் - மலை. பெருமைக்கும் உயர்வுக்கும் வன்மைக்கும் ஏற்ற உருவகம். இந்தத் தோளும், அம்பும், வில்லும் நோக்கி முடிப்பதற்குள் கடல், வெந்து முடிந்திருந்தது என்பார். "நோக்கவும் வெந்தது வேலையே" என்றார். விரைவுயர்வு நவிற்சியணி யென்பர். |
(60) |
6806. | 'தார் உலாம் மணி மார்ப ! நின் தம்பியே, |
| தேர் உலாவு கதிரும், திருந்து தன் |
| பேர் உலாவும் அளவினும், பெற்றனன், |
| நீர் உலாவும் இலங்கை நெடுந் திரு. |
| |
தார் உலாம் மணிமார்ப! - மாலைகள் அசையும் மணிமார்பினையுடைய மன்னனே! தேர் உலாவு கதிரும் - தேரிலே உலாவுகின்ற சூரியன் (சஞ்சரிக்கும் அளவும்); திருந்து தன் பேரும் உலாவு அளவினும்- செம்மையான தன் பெயரான இராம நாமம் உலகில் வழங்கும் காலம் வரையும்; நீர் உலாவும் இலங்கை நெடுந் திரு- கடல் நீர் சூழ்ந்த இலங்கை மாநகரத்துப் பெருஞ்செல்வம் முழுவதும்; நின் தம்பியே பெற்றனன் - உன்னுடைய தம்பியாகிய வீடணனே (இராமனால்) கொடுக்கப் பெற்றனன். |
பேர் உலாவும் என்ற தொடரில் உம்மையை இடம் மாற்றிப் 'பேரும் உலாவு' எனக் கொள்க, தேர் உலாவு கதிரும் தன் பேரும் என்பன எண்ணும்மைகள். மேலும் வீடணன் அரசுரிமை பெற்றான் என்பதை இராவணனுக்கு அறிவிக்குமாறு இராமபிரான் சொன்னதையும் நினைக. |
(61) |