6807. | 'சேது பந்தனம் செய்தனன் என்றது இப் |
| போது வந்த புது வலியோ-ஒரு |
| தூது வந்தவன் தோள் வலி சொல்லிய |
| ஏது அந்தம் இலாத இருக்கவே? |
| |
ஒரு தூது வந்தவன்- தூதாக வந்த ஒருவன் ஆகிய (அனுமனுடைய); தோள்வலி சொல்லிய ஏது- தோள் ஆற்றலைச் சொல்ல வல்ல காரணங்கள்; அந்தம் இலாத இருக்க - எண்ணற்றவை (நாம் தெரிந்து) இருக்க; சேது பந்தனம் செய்தனன் என்றது - இராமன் குரங்குகளைக் கொண்டு, சேதுவுக்கு அணை கட்டிவிட்டான் என்பது; இப்போது வந்த புது வலியோ? - இப்போது தான் புதிதாகச் சேர்ந்த வலிமையாமோ? (முன்பிருந்த வலிமையே என்றவாறு). |
முன்னே தூதனாக வந்த அனுமன் பலஏதுக்களால் விளக்கித் தெரிவித்த இராமன் தோளாற்றல் இருக்கவும், கடலை அணை கட்டித் தடுத்தான் என்றது கொண்டு, அது அவனுக்கு இப்போது புதிதாக உண்டான வலிமை என்று எண்ணுதல் தகுமோ?" என உரைப்பினுமாம். பந்தனம் -கட்டு. இப்பொருட்கு தூது வந்தவன். அந்தம் இலாத ஏதுக்களால் சொல்லிய தோள் வலி என இயைக்க. ஏது-காரணம். |
(62) |
6808. | 'மருந்து தேவர் அருந்திய மாலைவாய், |
| இருந்த தானவர்தம்மை இரவி முன் |
| பெருந் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின், |
| தெரிந்து காட்டினன், நும்பி சினத்தினான். |
| |
தேவர் மருந்து அருந்திய மாலை வாய் - தேவர்கள் அமிழ்தம் உண்ட ஒரு மாலைப்பொழுதில்; இருந்த தானவர் தம்மை-அவர்களிடையே மறைந்திருந்த அசுரர்களை; இரவி முன் பெருந்திண் மாயற்கு- முன்பு, சூரியன் பெருவலிமை வாய்ந்த திருமாலுக்கு; உணர்த்திய பெற்றியின் - (இவர் அசுரர் எனக்) காட்டிக் கொடுத்த தன்மை போல்; நும்பி சினத்தினான் - உன் தம்பியாகிய வீடணன் கோபங் கொண்டவனாய்; தெரிந்து காட்டினான்- குரங்கு வடிவத்திலிருந்த எங்களை வானரர்கட்கு (இவர்கள் அரக்கர் எனக்) காட்டிக்கொடுத்தான். |
மருந்து-அமுதம். "சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று" - (குறள். 82) |
(63) |