இறைவனின் ஐந்து நிலைகளுள் பரம், வியூகம், விபவம் (அவதாரம்), அந்தர்யாமித்துவம், அர்ச்சை என ஓதப்படுமவற்றுள் முதல் நிலை பரத்துவம் ஆதலின், "அருமறை பரம் என்று ஓதும் நன்னிலை" என்றார். வினையின் "நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்" (தொல். மரபி. 83) இறைவன் ஆதலின், அவன் எத்தகைய பிறவியெடுப்பினும் அப்பிறவிக்குரிய மாசுகள் அவனைப் பற்றா; ஆனால், உலகினரின் கண்ணுக்கு அவ்வாற்றல் புலப்படாது போய், கன்ம வயப்பட்டவன் போல் தோன்றுவன் என்பது தோன்ற, "தொன்னிலை பிரிந்தான் என்ன உயிர்கள் தோறும் பலவகை நின்ற தூயோன்" என்றார். "தொன்னிலை பிரிந்தான் என்ன நின்ற தூயோன்" என்பதனாலேயே தொல்நிலை பிரியாமை பெறப்பட்டது. ஆத்மாவிற்கு இன்பதுன்பங்கள் இல்லாமல் இருக்கவும், இச்சரீரத்தினுடைய சேர்க்கையால் அவை உண்டாகின்றன. அப்படி இறைவனுக்கும் இச்சரீரச் சேர்க்கையால் இன்பதுன்பங்கள் கூடாவோ எனின் கூடா. அதற்குக் காரணம் உட்புகுவதற்கு உளதாய காரண விசேடம். ஆத்மா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது. இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக்கூடத்தில் சிறையனும் கிடந்தான்; அரச குமாரனும் கிடந்தான்;சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போகரூபமாய் இருந்தது" (திருவாய் ஈடு. 3: 4: 10;) எனும் நம்பிள்ளையின் அரிய உரை இங்கு கருதத்தக்கது. |