சினம் கொள் திண்திறல் அரக்கனும்- (சாரன் இவ்வாறு புகழ்ந்ததைக் கேட்டு) சினம் கொண்ட பேர் ஆற்றல் வாய்ந்த இராவணனும்; சிறு நகை செய்தான்- புன்முறுவல் பூத்தவனாய் (அச்சாரனை நோக்கி); புனம் கொள் புன்தலைக் குரங்கினைப் புகழுதி போலாம்- கொல்லைகளில் அலைந்து திரிகின்ற சிறிய தலையினைக் கொண்ட குரங்குகளைப் புகழ்கின்றாய் போலும்! வனங்களும் படர் வரைதொறும்- வனங்களோடு கூடியுள்ள மலைகள் தோறும்; திரிதரும்- திரிகின்ற; மானின் பல இனங்களும் - மான்களின் பற்பல வகைக் கூட்டங்களும் (சேர்ந்து எதிர்த்தால்); அரியினை என் செயும் - ஒரு சிங்கத்தை என்ன செய்துவிடமுடியும்? என்றான்...- என்று (ஏளனமாய்க்) கூறினான். |