பக்கம் எண் :

544யுத்த காண்டம் 

துகைத்தவன்     உடற்பொறை  - (தன்னை நிலத்தில்)
தேய்த்தவனான இராவணனின் உடலை; சுறுக்கொள இறுக்கி -
புகை   நாற்றம்    எழுமாறு  இறுக்கிப் பிடித்து; தகைப் பெரு
வலத்தொடு
  - தகுதி   நிறைந்த   வலிமையோடு; தலத்திடை
அமுக்கி
- பூமியில்   அழுத்தி;   வகைப்  பிறை  நிறத்து -
பல்வகையான  வடிவங்களைக்  கொண்ட பிறைகளைப் போன்ற
தன்மையுடைய;    எயிறுடைப்     பொறி   வழக்கின்   -
(இராவணனுடைய) பற்களைக்  கொண்ட   உறுப்பாகிய  வாயின்
வழியே;   குகைப்  பொழி   புதுக்குருதி  -  குகையிலிருந்து
பொங்குகின்ற     வெள்ளம்    போலப்  (பொங்குகின்ற)  புதிய
இரத்தத்தை;   கைக்கொடு   குடித்தான்  -  (சுக்கிரீவன் தன்)
கைகளால் அள்ளிக் குடித்தான்.
 

சுறுக்கொளல்- புகை  நாற்றம்  வீசுதல்.  "மங்கையர்  நறுங்
கூந்தலின் சுறு நாறுகின்றது" (கம்ப. 6083) பிறை நிலாப் பல்வேறு
வடிவங்களில்    தோன்றுவது   போல், இராவணனின் பற்களும்
பல்வேறு   வடிவங்களில்     தோன்றுவதால்     "வகைப்பிறை
நிறத்து  எயிறு" என்றார். வழக்கின் - வழியின், பொருட்சிறப்பால்
"வழக்கி" எனும் பாடம் தவிர்த்து.  "வழக்கின்"   எனும்   பாடம்
கொள்ளப்பட்டது; இராவணன் பெரிய  வாய்,  குகைக்கும் அதில்
கொட்டும்  இரத்தம் குகையிலிருந்து  கொட்டும் வெள்ளத்திற்கும்
உவமை.
 

(12)
 

6907.

கைக்கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை, 

பைக் கொடு விடத்து அரவு எனப் பல கை பற்றி, 

மைக் கொடு நிறத்தவன் மறத்தொடு, புறத்தில் 

திக்கொடு, பொருப்பு உற நெருப்பொடு திரித்தான். 

 

மைகொடு   நிறத்தவன் - மை போற் கறுத்த நிறமுடைய
இராவணன்;    கைகொடு  குடித்தவன்- கைகளினாலே (தன்
உதிரத்தைக்)  குடித்தவனான    சுக்கிரீவனுடைய; உடல் கனக
வெற்பை
- உடல் என்னும் மேருகிரியை;   பைகொடு விடத்து
அரவு  எனப்
-  பையில்  கொடிய   நஞ்சினையுடைய பாம்பு
பற்றியதுபோல;  பலகை  பற்றி - தன் பற்பலவான கரங்களால்
பிடித்து;  மறத்தொடு  -  வீரத்துடன்;  புறத்தில்  திக்கொடு
பொருப்பு உற
- புறத்தே   உள்ள   எட்டுத்  திசையிலுமுள்ள
மலைகளின் மீது   மோதுமாறு;  நெருப்பொடு   திரித்தான் -
தீப்பொறி சிதறச் சுழற்றினான்.
 

விசை    மிகுதியுடன்   ஒரு   பொருள் ஒரு பொருளோடு
மோதுகையில் தீ எழும் எனும் அறிவியல் உண்மை. "பொருப்புற
நெருப்பொடு திரித்தான்" என்பதனால் உணர்த்தப்பட்டது.
 

(13)