பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 545

அகழியில் போர்
 

6908.

திரித்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி, 

பெருத்து உயர் தடக் கைகொடு அடுத்து இடை  

பிடித்து,

கருத்து அழிவுற,--திரி திறத்து எயில், கணத்து 

அன்று 

எரித்தவனை ஒத்தவன்,--எடுத்து அகழி இட்டான். 

 

எயில் கணத்து எரித்தவனை ஒத்தவன்- (முன்பு) திரிபுர
மதில்களை  கணப்பொழுதில்  எரித்தவனான சிவபெருமானைப்
போன்ற    சுக்கிரீவன்;   திரித்தவன்  உரத்தின் - தன்னை
(அவ்வாறு) சுழற்றியவனாகிய  இராவணனுடைய மார்பில்; உகிர்
செற்றும் வகை குத்தி
- நகங்கள் பதியுமாறு அழுந்தக் குத்தி;
பெருத்து உயர் தடக்கை  கொடு
- பருத்து நீண்ட தன் தன்
பெருங்கைகளைக் கொண்டு;   அடுத்து   இடை   பிடித்து -
(இராவணனை) நெருங்கி, அவன் இடுப்பைப் பற்றி; திரி திறந்து-
சுழற்றுகின்ற  வலிமையால்;  கருத்து  அழிவுற- (இராவணன்)
மூர்ச்சையடைய; எடுத்து அகழி இட்டான் -(அவனைத்) தூக்கி
அகழியில் வீசினான்.
  

(14)
 

6909.

இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான், 

தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான்; 

ஒட்ட உடனே அவனும் வந்து, அவனை உற்றான்; 

விட்டிலர் புரண்டு இருவர், ஓர் அகழின் வீழ்ந்தார். 

 

தட்ட-  சுக்கிரீவன்  (ஓடிவிடாமல்)  தடுக்கும் பொருட்டு;
உயரத்தினில் உறும் தசமுகத்தான்
- (அகழியிலிருந்து) உயரே
ஏறிவந்துவிட்ட  இராவணன்; இட்டவனை- தன்னை அகழியில்
வீழ்த்திய   சுக்கிரீவனை;  இட்ட அகழில் - அவன் வீழ்த்திய
அதே அகழியில்; கடிதின் இட்டான்- விரைவில் தள்ளினான்;
ஒட்ட உடனே அவனும் வந்து
- மீண்டும் அவனைத் தாக்கச்
சுக்கிரீவனும் மேலே வந்து; அவனை உற்றான் - இராவணனை
நெருங்கினான்; இருவர் விட்டிலர்- இருவரும் ஒருவரை ஒருவர்
விடாமல்; புரண்டு ஓர் அகழின் வீழ்ந்தார்- (கட்டிப்) புரண்டு,
(மீண்டும்) ஓர் அகழியில் வீழ்ந்தனர்.
  

இட்டவன்-சுக்கிரீவன். 
 

(15)