பக்கம் எண் :

638யுத்த காண்டம் 

அரக்கர் சேனையின் ஆரவாரம்
 

7050.

தழிய வானர மாக் கடல் சாய்தலும், 

பொழியும் வெம் படைப் போர்க் கடல் ஆர்த்தவால்- 

ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து 

அழியும் மாக் கடல் ஆர்ப்பு எடுத்தென்னவே. 

 

ஒழியும் காலத்து - யாவும் அழியும் ஊழிக் காலத்தில்; 
ஒரு  மூன்று உலகும் ஒத்து
- மூன்று உலகங்களும் ஒன்று 
சேர்ந்து;  அழியும் - அழிவதற்குக் காரணமான; மாகடல்
பெருங்கடலானது;   ஆர்ப்பு  எடுத்து அன்ன- பேரொலி 
எழுப்பியது போன்று;தழிய மாகடல் வானரம் சாய்தலும்-
(மதிலைத்)  தழுவியிருந்த  பெருங்கடல்   போன்ற  வானரப் 
படைகள் வலிமை குன்றிய அளவில்; பொழியும் வெம்படை
மேன்மேலும் எய்கின்ற கொடிய    போர்க்கருவிகளையுடைய; 
போர்க்கடல்   ஆர்த்த
- போர்  செய்யும் கடல் போன்ற 
இராக்கத சேனை ஆர்த்தது.
 

கடல்  ஆர்த்த-ஒருமைப்  பன்மை  மயக்கம்.  சுவர்க்கம்,
மத்திமம், பாதலம் என உலகை மூன்றாகக் கூறுதல் மரபாதலின்
"உலகொடு   மூன்றும்"  என்றார்.   உலகம் கடலால் அழியும் 
என்பது முன்னோர் துணிபாதலின், "ஒழியும் காலத்து உலகொரு 
மூன்றும் ஒத்து அழியும் மாக்கடல்" என்றார்.
 

(34)
 

7051.

முரசும், மா முருடும், முரல் சங்கமும், 

உரை செய் காளமும், ஆகுளி ஓசையும், 

விரைசும் பல் இயம், வில் அரவத்தொடும், 

திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே. 

 

முரசும் -  முரசுக்  கருவியும்; மாமுருடும் - பெரிய முருடு 
என்னும்  கருவியும்;  முரல்  சங்கமும் -  முரலுகின்ற  சங்கும்; 
உரை  செய்  காளமும்
- புகழ்  பெற்ற எக்காளமும்; ஆகுளி 
ஓசையும் 
-  ஆகுளி என்னும் சிறு பறையும்; (என)விரைசு பல் 
இயம்
- பலவகையாய்க் கலந்து ஒலிக்கும் பல்வகைக் கருவிகளின்
ஓசையும்;   வில்   அரவத்தொடும் -   வில்லிலிருந்து  சுணை
விடுகையில் எழும் ஓசையுடன் கூடி;திரை செய் வேலைக்கு ஓர்
ஆகுலம் செய்த
- அலையால் ஆர்ப்பரிக்கும்  கடலுக்கும் ஒரு
மனக்கலக்கத்தை உண்டாக்கிவிட்டன.