பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 645

பட்ட  யானை-  வானரங்களால்  தாக்கப்பட்டு  மாண்ட
யானைகளிலிருந்து;  அழிபுனல்  யாறு  எலாம் -  பெருகிய
இரத்தத்தால் ஆன ஆறுகள் எல்லாம்;பானல்பட்ட- கடலிற்
சென்று கலந்தன;  பல்கணை  மாரியின்  சோனைபட்டது-
அரக்கரின்   பல்வகையான   அம்பு   மழையால் விடாமழை 
தோற்றது;   சொல்  அரும்- (அதனால்  இவ்வளவு  என்று)  
சொல்ல இயலாத;  வானரச்  சேனை பட்டது -  குரங்குச் 
சேனை   இறந்து   பட்டது;  செம்புண்  நீர்    பட்டது
(அதனால் களம் எங்கும்) சிவந்த இரத்தமே (கண்ணில்) பட்டது.
 

"யானை பட்ட வழி" எனக் கொண்டு, யானைகள் மாண்டு 
கிடந்த வழிகளில் எல்லாம் பெருகி ஓடிய குருதி, ஆறுகளாகி, 
அருகில்  உள்ள   கடலில்  சங்கமித்தன   எனக் கூறினுமாம். 
பானல்-கடல்.  யானைகளின்     இரத்தமும்,   வானரங்களின் 
இரத்தமும் வேறுபாடின்றிக் கடலில் கலந்தன என்றவாறு. 
 

(50)
 

அரக்கர் சேனையின் அழிவு கண்டு, வச்சிரமுட்டி வந்து பொருதல்
  

7067.

காய்ந்த வானர வீரர் கரத்தினால் 

தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர் 

பாய்ந்த தானைப் படு களம் பாழ்படச்

சாய்ந்ததால், நிருதக் கடல்-தானையே. 

 

காய்ந்த  வானர  வீரர்  கரத்தினால் -  வெகுண்டெழுந்த
வானரப்படை வீரர்களின் கைகளால்; தேய்ந்த ஆயுளர் ஆனவர்
- குறைந்த  ஆயுளையுடையவராகிப்    போன  அரக்கர்களுடைய;
செம்புண்  நீர்   பாய்ந்த-  சிவந்த  இரத்தம்   (வெள்ளமாகப்)
பாய்ந்த;  தானைப்  படுகளம்  பாழ்பட-  சேனைகள்    இறந்து
கிடந்த   போர்க்களம்  பாழாகும்படி;   நிருதக்    கடல்தானை-
அரக்கர்களுடைய   படையாகிய   கடல்;    சாய்ந்தது -  வலி
குன்றியது.
 

வானரர்   காய்வு(சினம்),  அரக்கர்  தேய்வுக்குக்    காரணம்
ஆயிற்று.   ஆயுள்   தேய்ந்தவர் எனவர உரிய தொடரை "தேய்ந்த
ஆயுளர்"  என்று  ஓர்  நயம்.  களத்தில் உள்ளவர் மடிவது கண்டு,
மற்றவர்  அஞ்சி  ஓடினர்  ஆதலால்,  "களம்   பட,     சாய்ந்தது
நிருதக் கடல் தானை" என்றார்.
 

(51)
 

7068.

தங்கள் மாப் படை சாய்தலும், தீ எழ 

வெங் கண் வாள் அரக்கன், விரை தேரினை,