| கங்க சாலம் தொடரக் கடற் செலூஉம் |
| வங்கம் ஆம் என வந்து, எதிர் தாக்கினான். |
| |
தங்கள் மாப்படை சாய்தலும் - தங்களுடைய (அரக்கருடைய) பெரும்படை வலி குன்றிய போது; வெங்கண் தீ எழ- கண்களில் வெப்பமிக்க தீ (ப்பொறி) எழுமாறு; வாள் அரக்கன்-கொடிய அரக்கனாகிய வச்சிரமுட்டி;விரைதேரினை - வேகமாக வரும் தேரினை; கங்கசாலம் தொடர- பருந்துக் கூட்டங்கள் பின்தொடர்ந்து வர; கடல்செலூஉம் வங்கம் ஆம் என- கடலிலே செல்லும் கப்பல் போல் (செலுத்தி); வந்து எதிர் தாக்கினான் - வந்து எதிரே தாக்கத் தொடங்கினான். |
இங்குக் கூறப்படும் அரக்கன் வச்சிரமுட்டி என்பது இப்படலத்து 55 ஆம் பாடலால் விளங்கும்.கங்கசாலம்-பருந்துக் கூட்டம். "கங்கமொடு காகம் மிடையக் கடலின் ஓடும் வங்கமெனல் ஆயதொரு தேரின் மிசை வந்தான்" (3034) என்பார் முன்னும் பெருவீரர்கள் போர்க்களம் செல்கையில், தமக்குக் களத்தில் இரை மிகுதிபடக் கிட்டும் என்று பருந்துகள் பின் தொடரும். "கூற்று இனத்து அன்னார்கொடுவில் உடன் ஏந்தி, பாற்றினம் பின்படர முன்படர்ந்து" (பு. வெ.மாலை. 1,5) என்பது காண்க. குருதியை வெள்ளம் என்றதற்கேற்ப, அதனிடை ஓடும் தேரினை வங்கம் என்றார். |
(52) |
| 7069. | வந்து தாக்கி, வடிக் கணை மா மழை |
| சிந்தி, வானரச் சேனை சிதைத்தலும், |
| இந்திராதியரும் திகைத்து ஏங்கினார்; |
| நொந்து, சூரியன் கான்முளை நோக்கினான். |
| |
வந்து தாக்கி - (வச்சிரமுட்டி தேரில் விரைந்து) வந்து தாக்கி; வடிக்கணை மாமழை சிந்தி- கூரிய அம்புகளை மழையாகப் பொழிந்து; வானரத் தானை சிதைத்தலும் - குரங்குப் படையை அழித்தபோது; இந்திராதியரும் திகைத்து ஏங்கினார்- இந்திரன் முதலான தேவர்களும் மனம் தடுமாறி (எது நேருமோ என்று) தவித்தார்கள்; சூரியன் கான்முளை- சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; நொந்து நோக்கினான் - மனம் நொந்து (அந்நிலையைக்) கண்ணுற்றான். |
வந்து தாக்கி- "வந்து தாக்கினான்" என மேற்பாட்டில் சொன்னதன் அநுவாதம். |
(53) |