"அவன் அளக்கலாகா அளவும் பெருமையும், துளக்கலாகா நிலையும் தோற்றமும்" (நன். பொதுப்) கற்பார் கண் முன் நிறுத்துகின்றார் கவிஞர். |
(55) |
கீழை வாசலில் நிகழ்ந்த போர் |
| 7072. | வீழி வெங் கண் இராக்கதர் வெம் படை, |
| ஊழி ஆழி கிளர்ந்தென ஓங்கின, |
| கீழை வாயிலில் கிட்டலும், முட்டினர், |
| சூழும் வானர வீரர் துவன்றியே. |
| |
வீழி வெங்கண் இராக்கதர் வெம்படை- வீழிக்கனி போன்று சிவந்த கொடுங்கண்களையுடைய அரக்கரின் கொடும்படை; ஊழி ஆழி கிளர்ந்தென - ஊழிக்காலத்தே கடல் பொங்கியெழுந்தது போல; ஓங்கின - மேல் எழுந்து வந்தன; கீழை வாயிலில் கிட்டலும்- வை கிழக்கு வாசலை அடைதலும்; சூழும் வானர வீரர் துவன்றி முட்டினர்- சுற்றிலும் உள்ள வானரப்படை வீரர்கள் நெருக்கித் தாக்கினர். |
வீழி-ஒரு கனி; செந்நிறமுடையது. வெகுளியால் எப்போதும் சிவந்திருக்கும். அரக்கர் கண்களுக்கு உவமை. கீழை வாசல் வானரப்படைத் தலைவன் நீலன் ஆவான். |
(56) |
| 7073. | சூலம், வாள், அயில், தோமரம், சக்கரம், |
| வாலம், வாளி, மழையின் வழங்கியே, |
| ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும், |
| காலும் வாலும் துமிந்த, கவிக் குலம். |
| |
ஆலம் அன்ன அரக்கர்- கொடிய நஞ்சு போன்ற அரக்கர்கள்; சூலம், வாள், அயில், தோமரம், சக்கரம், வாலம், வாளி- சூலம், வாள், மழு, தோமரம், சக்கரம், பிண்டி பாலம், அம்பு (முதலிய) ஆயுதங்களை; மழையின் வழங்கி- மழை போன்று பொழிந்து; அடர்த்தலும்- எதிர்த்தபோது; கவிக்குலம் - வானரக்கூட்டங்கள்; காலும் வாலும் துமிந்த- கால்களும் வால்களும் துண்டிக்கப்பட்டன ஆயின. |
சூலம் - முத்தலைவேல். தோமரம் - தண்டு; இரும்புலக்கையுமாம். எறியீட்டி என்பாரும் உளர். வாலம்- பிண்டிபாலம். ஆலம்-நஞ்சு. அரக்கர் ஆலத்துக்கு ஒப்பு. "ஆலம் அன்னவர்க்கு" (கம்ப. 5351) |
(57) |