| 7074. | வென்றி வானர வீரர் விசைத்து எறி |
| குன்றும் மா மரமும், கொடுங் காலனின் |
| சென்று வீழ, நிருதர்கள் சிந்தினார்; |
| பொன்றி வீழ்ந்த, புரவியும் பூட்கையும். |
| |
வென்றி வானர வீரர் - வெற்றிக்குரிய வானர வீரர்கள்; விசைத்து எறி- விசையோடு எறிகின்ற; குன்றும் மாமரமும்- மலைகளும் பெரிய மரங்களும்; கொடும் காலனின் - கொடிய கூற்றுவனைப் போல; சென்று வீழ- (விரைந்து) சென்று வீழ்ந்த போது; நிருதர்கள் சிந்தினார்- அரக்கர்கள் சிதறினர்; புரவியும் பூட்கையும் பொன்றி வீழ்ந்த- குதிரைகளும் யானைகளும் இறந்து வீழ்ந்தன. |
புழைக்கை - பூட்கை என ஆனையின் பெயராயிற்றுப் போலும். துளையுடைய கையுடையது. என்னும் காரணப்பெயர். சினை ஆகுபெயர். |
(58) |
| 7075. | தண்டு, வாள், அயில், சக்கரம், சாயகம், |
| கொண்டு, சீறி, நிருதர் கொதித்து எழ, |
| புண் திறந்து குருதி பொழிந்து உக, |
| மண்டி ஓடினர், வானர வீரரே. |
| |
நிருதர்- சினம் மிக்க அரக்கர்; தண்டுவாள் அயில் சக்கரம் சாயகம் கொண்டு - கதை, வாள், வேல், சக்கரப்படை, அம்பு முதலியன கைக்கொண்டு; சீறிக் கொதித்து எழ- வெகுண்டு மனம் வெம்பி எழுந்தபோது; வானர வீரர்கள் - குரங்கு வீரர்கள்; புண் திறந்து குருதி பொழிந்து உக-(பகைவர் ஆயுதங்களால் விளைந்த) புண்களின் வாய் திறந்து கொட்டிய உதிரம் சிந்த; மண்டி ஓடினர் - நெருங்கி ஓடினர். |
தண்டு-கதை. சாயகம்-அம்பு. |
(59) |
நீலன் நிகழ்த்திய போர் |
| 7076. | எரியின் மைந்தன், இரு நிலம் கீழுற, |
| விரிய நின்ற மராமரம் வேரொடும் |
| திரிய வாங்கி, நிருதர் வெஞ் சேனை போய் |
| நெரிய, ஊழி நெருப்பு என வீசினான். |