இராவணன் சீதையைப் பெற உபாயம் கூறுமாறு கேட்க, மகோதரன் மருத்தன் என்னும் அரக்கனை மாயாசனகனாக மாற்றி, அந்த மாயச் சனகனைக் கொண்டு இணங்கச் செய்யலாம் என உபாயம் கூறுகிறான். சீதையிடம் முதலில் இராவணன் சென்று பலவாறு குறையிரந்து பேசுகிறான். சீதை அவனைத் துரும்பு என இகழ்ந்து பேசுகிறாள். இராவணன், “உன் கொழுநனின் வீரத்தில் பெரு நம்பிக்கை கொண்டு இராதே. நான் அயோத்திக்கும் மிதிலைக்கும் வீரர்களை அனுப்பி உள்ளேன்” என்று அச்சுறுத்துகிறான். அப்போது மகோதரன் மாயா சனகனைப் பற்றிக் கொண்டு வருகிறான். அதைக் கண்ட சீதை அழுது அரற்றுகிறாள். இராவணன் பெருஞ் செல்வத்தைச் சனகனுக்குத் தருகிறேன் என்று ஆசை காட்டி இணங்குமாறு வேண்டுகிறான். சீதை இராவணனைக் கடிந்து கூற, இராவணன் சினம் கொண்டு சீதையைக் கொல்லச் செல்லுகிறான். மகோதரன் இராவணனைத் தடுத்துச் சனகன் கூறினால் சீதை கேட்பாள் என்று கூறி, மாயாசனகன் மூலம் சீதைக்கு அறிவுரை கூறச் செய்கிறான். அச்சனகன் தன் உண்மையான தந்தை யல்லன் என்று ஐயங்கொண்டு, வெறுத்துக் கூறுகிறாள். இராவணன் ‘இவன் சனகன் அல்லன் என நீ எண்ணுவதால் இவனை நான் கொன்று விடுகிறேன்’ என்று கூற மகோதரன் அவனைத் தடுத்து நிறுத்துகிறான். அப்போது கும்பகருணன் இறப்பால் வானரங்கள் செய்த பேரொலி இராவணன் காதில் விழுகிறது. அதனால் அவன் கலங்கியிருக்கும் போது தூதுவர் கும்பகருணனது மரணத்தைத் தெரிவித்தனர். அது கேட்ட இராவணன் அவலப்புலம்பலும், சினமும் கொண்டு சீதையை விட்டுப் போகின்றான். மகோதரன் மாய சனகனைச் சிறையில் அடைக்கச் சொல்லி விட்டு வெளியேறுகிறான். திரிசடை மாயா சனகனது உண்மையைச் சீதைக்குச் சொல்லுகிறாள். சீதை துன்பம் நீங்கி மகிழ்கிறாள். இச்செய்திகள் இப்படலத்தில் கூறப்படுகின்றன. |