மது, கைடபர் ஒரு கற்பத்தில் திருமாலின் காதில் இருந்து தோன்றியவர்கள் என்பர். திருமாலின் மூச்சில் பிறந்தவர்கள் என்று கூறுவதும் உண்டு. இவர்கள் திருமாலுடன் போரிட்டு அவர் தொடையில் அகப்பட்டுக் கதையால் கொல்லப்பட்டனர். அவர்களுள் மது கும்பகர்ணன் ஆகவும், கைடபன் அதிகாயன் ஆகவும் இந்த யுகத்தில் பிறந்தனர் என்க. |
(75) |
இராமன் இலக்குவன் வலிமை கூறல் |
| 7802. | என்றான், அவ் இராவணனுக்கு இளையான்; ‘நன்று ஆகுக!’ என்று, ஒரு நாயகனும், மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா- நின்றான், இது கூறி நிகழ்த்தினனால்: |
அவ் இராவணனுக்கு இளையான் என்றான் - என்று அந்த இராவணனுக்கு தம்பியாகிய - (வீடணன்) கூறினான்; நன்று ஆகுக என்று - நன்று ஆகட்டும் என்று; ஒரு நாயகனும் - ஒப்பற்ற தலைவன் ஆகிய இராமனும்; மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா - மின்னலை ஒத்து வெளிப்படும் வெள்ளிய பற்கள் தெரியுமாறு சிரிப்பை வேறாக வெளிப்படுத்தி; நின்றான் இது கூறி நிகழ்த்தினனால் - நின்று இதனைக் கூறத் தொடங்கினான். |
இராமன் தன் தம்பியின் ஆற்றல் தெரிந்து வெண் நகை வேறு செய்தான். |
(76) |
| 7803. | ‘எண்ணாயிர கோடி இராவணரும் விண் நாடரும், வேறு உலகத்து எவரும் நண்ணா ஒரு மூவரும், நண்ணிடினும், கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால்; |
எண்ணாயிர கோடி இராவணரும் - எண்ணாயிரங்கோடி இராவணர்களும்; விண் நாடரும் - விண்ணுலகத்தவரும்; வேறு உலகத்து எவரும் - வேறு உலகங்களில் உள்ள எவரும்; நண்ணா ஒரு மூவரும் - நெருங்குதற்குரிய வலி படைத்த ஒப்பற்ற மூவரும்; நண்ணிடினும் - நெங்கிப் (போரிட எதிர் வரினும்); இவன் வில் தொழில் கண்ணால் காணுதியால் - (அவர்களை எல்லாம் எதிர்க்க வல்ல) இந்த இலக்குவனுடைய வில் தொழில் ஆற்றலைக் கண்ணால் (நேரிடையாகக்) காண்பாய். |