சென்றவன் தன்னை நோக்கி - தன்னை நோக்கிச் சென்றவனாகிய (வந்தவனாகிய) இடபனைப் பார்த்து; சிரித்து - வயமத்தன் எள்ளிச் சிரித்து; நீ சிறியை - நீ மிகச் சிறியவன்; உன்னை வென்று அவம் - உன்னை வெல்லுதல் வீண்; உம்மை எல்லாம் விளிப்பெனோ - உங்களைப் போன்ற (சிறியவர்களை) எல்லாம் போருக்கு அழைப்பேனோ (அழையேன் என்றபடி); விரிஞ்சன் தானே என்றவன் - பிரமதேவன்தான் என்று சொல்லத் தக்கவன்; எதிர்ந்த போதும் - (என்னை) எதிர்த்துவந்த போதும்; இன்று இராவணன் மகனை - இப்போது இராவணனது மகனாகிய அதிகாயனைக்; கொன்றவன் தன்னைக் கொன்றே - கொன்றவனாகிய இலக்குவன் தன்னைக் கொன்றபிறகே; குரங்கின் மேல் கொதிப்பென் - குரங்குகளின் மீது சினம் பொங்கப் போரிடுவேன்; என்றான் -என்று கூறினான். |
அவம் - வீண். விரிஞ்சன் - பிரமன்; இது அநுமனைக் குறிப்பிட்டுக் கூறியதாகக் கொள்வர் வை.மு.கோ. |
(230) |
7957. | ‘வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு, பலி உண் வாழ்க்கைப் பேய் கொண்டு, வெல்ல வந்த பித்தனே! மிடுக்கைப் பேணி நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ! நின் நோன்மை எல்லாம் ஓய்கின்றாய் காண்டி!’ என்னா, உரைத்தனன், இடபன் ஒல்கான். |
வாய் கொண்டு - வாயைக் கொண்டு; சொற்றற்கு ஏற்ற - சொல்லுவதற்கு ஏற்புடைய; வலி கொண்டு - வலிமையைக் கொண்டு; பலி உண்வாழ்க்கை - பிறர் தரும் உணவை உண்டு வாழும் வாழ்க்கையை உடைய; பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே - பேய்களைக் கொண்டு வெற்றிபெற வந்த பித்தனே!; மிடுக்கைப் பேணி - (தன்) வலிமையைப் புகழ்ந்து; நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ - நோயை (உடலில்) கொண்டிருந்தும் (அதற்குத் தேவையான) மருந்தைச் செய்யமுடியாத ஒருவனே!; நின் நோன்மை எல்லாம் - உன் வலிமை எல்லாம்; ஓய்கின்றாய் - ஓயப் போகிறாய், காண்டி (அதனைக்) காண்பாயாக; என்னா - என்று; இடபன் - இடபன் என்ற குரங்குத் தலைவன்; ஒல்கான் உரைத்தனன் - தளர்ச்சி அடையாதவனாய்க் கூறினான். |