மேல் எழுந்து வந்தவனாகிய வயமத்தன்; பாரிடைக் குதியா முன்னம் - நிலத்தில் குதிப்பதற்கு முன்பே; இடபனும் - இடபன் என்பவனும்; பதக - பாதகனே; நீ போய் - நீ விலகிப் போய்; ஆரிடைப் புகுதி - எங்கு (சென்று தப்பிப்) புகுவாய்; என்னா - என்று சொல்லிக்கொண்டு; அந்தரத்து ஆர்த்துச் சென்றான் - விண்ணில் பேரொலி செய்து கொண்டு சென்றான். |
நெருப்பு - ஈண்டுச்சினம். அந்தரம் - இடம், இங்கே விண்எனவும் போர்க்களம் எனவும் கொள்ளலாம். பதகன் - பாதகன். |
(234) |
7961. | அல்லினைத் தழுவி நின்ற பகல் என, அரக்கன் தன்னை, கல்லினும் வலிய தோளால், கட்டியிட்டு இறுக்கும் காலை, பல்லுடைப் பில வாயூடு பசும் பெருங் குருதி பாய, வில்லுடை மேகம் என்ன, விழுந்தனன், உயிர் விண் செல்ல. |
அல்லினைத் தழுவி நின்ற பகல் என - இரவினைத் தழுவி நின்ற பகல் போல; அரக்கன் தன்னை - அரக்கனாகிய வயமத்தன் தன்னை; கல்லினும் வலிய தோளால் - (இடபன் தன்னுடைய) கல்லைக் காட்டிலும் வலிமையுள்ள தோள்களால்; கட்டியிட்டு - கட்டிப்பிடித்து; இறுக்கும் காலை - இறுக்கமாய் நெருக்கிய பொழுது; பல்லுடைப் பில வாயூடு - பல்பொருந்திய குகை போன்ற வாயின் வழியாக; பசும் பெருங்குருதிபாய - பசிய மிகுதியான உதிரம் வெளிப்பட; உயிர் விண் செல்ல - உயிர் வானுலகம் செல்ல; வில்லுடை மேகம் என்ன - வில்லை உடைய மேகம் போல; விழுந்தனன் - நிலத்தில் விழுந்தான்; |
அல் - இரவு. அல்லினைத் தழுவி நின்ற பகல் - வயமத்தனைத் தழுவி நின்ற இடபன். பிலம் - குகை. பசுங்குருதி புதிய இரத்தம். வில்லுடை மேகம் - வயமத்தன். |
(235) |
சுக்ரீவன் கும்பன் போர் |
7962. | குரங்கினுக்கு அரசும், வென்றிக் கும்பனும், குறித்த வெம் போர் அரங்கினுக்கு அழகு செய்ய, ஆயிரம் சாரி போந்தார், |