பக்கம் எண் :

198யுத்த காண்டம் 

ஒன்றப்புகும்     காலம் உணர்தல் - மாமரம் துண்டு பட்டமையால்
இவனை   எக்காலத்துத்   தாக்குவது   என்று   நினைத்தல்,  நின்று
நினையாதமுன்   கருவி   இன்மையால்   எப்போர்க்கருவி  கொண்டு
தாக்குவது  என  நினைத்தல்.  இங்குக் காலமும் கருவியும் கூறியவாறு
காண்க.   நீலன்  தண்டு  கொடுத்தல்  -  இருவர்  போரிடும்  போது
அடுத்தவர்    இடைநுழைந்து    போரிடுதல்    இல்லை.   ஆனால்
அவர்களுக்குப்  போர்க்  கருவி  கொடுத்து உதவுதல் உண்டு என்பது
இதனால் தெரிகிறது.
 

                                                 (239)
 

7966.அத் தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான்,
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான்,
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்;
சித்தங்கள் நடுங்கி, அரக்கர் திகைத்தார்.

 

கொடுத்தது     அத்தண்டு - (நீலன் கொணர்ந்து) கொடுத்தாகிய
அந்தத்  தண்டினை;  கைக்கொடு  அடைந்தான்  - கையில் கொண்டு
போரிட  அடைந்தவனாகிய  (சுக்ரீவன்); அண்டமும் மண்ணும் ஒத்து
நடுங்க  உருத்தான்
- விண்ணும் மண்ணும் ஒன்று போல் நடுங்குமாறு
சினந்தவனாகி;    பித்தன்    -    (போர்)    வெறிகொண்டவனாகிய
(கும்பனுடைய);   தடமார்பொடு  தோள்கள்  பிளந்தான்  -  பரந்த
மார்பையும்  தோள்களையும்  பிளந்திட்டான்; அரக்கர் - (அதுகண்ட)
அரக்கர்கள்;  சித்தங்கள் நடுங்கி  திகைத்தார்  - மனங்கள் நடுங்கித்
திகைத்தனர்.
 

அந்தாதித்தொடை காண்க.
 

                                                 (240)
 

7967.அடியுண்ட அரக்கன், அருங் கனல் மின்னா
இடியுண்டது ஓர் மால் வரை என்ன, விழுந்தான்;
‘முடியும் இவன்’ என்பது ஓர் முன்னம், வெகுண்டான்,
‘ஒடியும் உன தோள்’ என, மோதி உடன்றான்.

 

அடியுண்ட     அரக்கன்  -  அடிபட்ட  அரக்கனாகிய கும்பன்;
அருங்கனல் மின்னா  - பெருநெருப்போடு மின்னி;  இடியுண்டது ஓர்
மால்   வரை  என்ன  விழுந்தான்
-  இடியால்  தாக்கப்பட்ட  ஒரு
பெரியமலை  என்று  கூறுமாறு  (நிலத்தில்)  விழுந்து;  இவன் முடியும்
என்பது  ஓர்  முன்னம்
- இவன் இறந்து முடிவான் என்று கருதுதற்கு
முன்பே;  வெகுண்டான் - சினம் கொண்டவனாய்; உனதோள் ஒடியும்
என
 - (சுக்ரீவனைப் பார்த்து) உன்தோள் (இப்போது) ஒடியும் என்று
கூறி; மோதி உடன்றான் - மோதிப் போரிட்டான்.
 

                                                 (241)