துறந்தமையால் (அவர்தம் உடலை) வீசிவிட்டுத்; தம்மைக் கொண்டு ஓடிப் போனார் - தங்களைக் (காப்பாற்றிக்) கொள்வதற்காக ஓடிப் போய்; வாயால் குருதி கக்கினர் - (துன்பமிகுதியாலும் நெடுந் தூரம் ஓடினமையாலும்) வாயில் இரத்தம் கக்கிக்; கண்மணி சிதற - கண்ணின் மணிகள் தெறித்து விழுந்ததால்; திக்கொடு நெறியும் காணார் - திசையும் செல்லும் வழியும் தெரியாதவர்களாகி, திரிந்து சென்று - (காலால்) தடவி (வழிமாறிச்) சென்று; உயிரும் தீர்ந்தார் - உயிர் விட்டார்கள். |
(259) |
அதிகாயனும் பிறரும் இறந்து பட்டமையை இராவணனுக்குத் தூதர் கூறல் |
7986. | இன்னது ஓர் தன்மை எய்தி, இராக்கதர் இரிந்து சிந்தி, பொன் நகர் புக்கார்; இப்பால், பூசல் கண்டு ஓடிப் போன, துன்ன அருந் தூதர் சென்றார், தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம் மன்னவன் அடியில் வீழ்ந்தார், மழையின் நீர் வழங்கு கண்ணார். |
இன்னது ஓர் தன்மை எய்தி - இப்படிப் பட்ட ஒரு நிலைமையை அடைந்து; இராக்கதர் இரிந்து சிந்தி - அரக்கர்கள் நிலைகெட்டுச் சிதறி; பொன் நகர் புக்கார் - அழகிய இலங்கை நகரத்தை அடைந்தார்கள்; இப்பால் - இப் பகுதியில்; பூசல் கண்டு - நடந்த போரினைக் கண்டு; ஓடிப் போன - (அங்கு நடந்ததைக் கூறுவதற்காக) ஓடிப்போன; துன்ன அருந்தூதர் சென்று - நெருங்குவதற்கு அருமையான தூதுவர்கள் சென்று; மழையின் நீர் வழங்கு கண்ணார் - மழை போல நீர் சொட்டுகிறகண்களை உடையவராய்; தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம் மன்னவன் - வேலைப்பாடு தோன்ற அமைக்கப்பட்ட வீரக்கழலை அணிந்த அரக்கர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இராவணனது; அடியில் வீழ்ந்தார் - அடிகளில் விழுந்து வணங்கினர். |
இரிந்து - நிலைகெட்டு, பூசல் - போர். தொடுகழல் - வேலைப்பாடு தொடுக்கப்பட்ட கழல். |
(260) |