வானத்தை இடிக்க நினைப்பான்; எண்ணிய உயிர்கள் எல்லாம் - (உலகில்) எண்ணிக் கணக்கிடப்பட்டுள்ள உயிர்கள் அனைத்தையும்; ஒரு கணத்து எற்ற எண்ணும் - ஒருகண நேரத்தில் அழிக்க எண்ணுவான்; பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் - பெண் என்ற பெயரைக் கொண்ட பொருள்களை எல்லாம் பிளந்து அழிப்பேன்; என்று எண்ணும் - என்று நினைப்பான்; எண்ணி - அவ்வாறு நினைத்து; புண்ணிடை எரிபுக்கென்ன - புண்ணில் தீப் புகுந்தது போல; மானத்தால் புழுங்கி நையும் - மான உணர்வினால் (மனம்) புழுங்கி வருந்துவான். |
தனக்குத் துன்பம் வருகிற போது பெண்ணாசையை மறத்தலும் வெறுத்தலும் செய்யும் இராவணன் பிறகு அதை மறந்தவனாகிக் காமப் பித்துக் கொண்டு செயல்படுவதை எண்ணுக. |
(264) |
தானியமாலி இராவணன் அடி வீழ்ந்து அரற்றல் |
7991. | ஒருவரும் உரையார் வாயால், உயிர்த்திலர், உள்ளம் ஓய்வார், வெருவரும் தகையர் ஆகி, விம்மினர் இருந்த வேலை, தரு வனம் அனைய தோளான்தன் எதிர் தானிமாலி இரியலிட்டு அலறி, ஓயாப் பூசலிட்டு, ஏங்கி வந்தாள்; |
ஒருவரும் வாயால் உரையார் - (இராவணனைச் சூழ்ந்திருந்தவர்கள்) ஒருவரும் வாயால் எதுவும் பேசாமல்; உயிர்த்திலர் - மூச்சுக்கூட விடாதவர்களாய்; உள்ளம் ஓய்வார் - மனம் (தடுமாறி) ஓய்ந்து; வெரு வரும் தகையர் ஆகி - அஞ்சுகிற தன்மை உடையவர்களாகி; விம்மினர் இருந்த வேலை - அழுதவர்களாய் இருந்த பொழுது; தருவனம் அனைய தோளான் - மரங்கள் அடர்ந்த வனம் போன்ற தோள்களை உடைய இராவணன்; தன் எதிர் - தன் எதிரில்; தானிமாலி - தானிய மாலி (என்ற அவன் மனைவி); இரியலிட்டு - நிலைகெட்டு; அலறி - அலறிக் கொண்டு; ஓயாப் பூசலிட்டு - ஓயாத பேரொலி செய்து கொண்டு; ஏங்கி வந்தாள் - அழுது கொண்டு வந்தாள். |
வெருவரல் - அஞ்சுதல், இரியல் - நிலைகெட்டு ஓடல், பூசல் - பேரொலி. உரையார், உயிர்த்திலர். |
(265) |