அழக்கண்டும் அறிந்திலாதாள் - (இதுநாள்வரை பிறர்) அழுவதைப் பார்த்து இருந்தும் துன்பத்தை அறிந்திலாதவளாகிய தானியமாலி; மென்மைத் தோள் நிலத்தை மேவ - தன் மெல்லிய தோள்கள் நிலத்தைப் பொருந்த; அரக்கன் தாள் மேல் வீழ்ந்தனள் - அரக்கனாகிய இராவணனது கால்களின் மீது விழுந்து; போழ்ந்தனள் - வாயைத் திறந்து கொண்டு; பெரும் பாம்பு என்னப் புரண்டனள் - (பெரிய) மலைப் பாம்பு போல (நிலத்தில்) புரண்டு; பொருமிப் பொங்கி - மனத்தில் (துன்பப்) பொருமல் பொங்கி (வர); கொடியாய் - கொடியவனே; சூழ்ந்தனை என்ன - (எனக்குக் கேடு) செய்தனை என்று கூறித்; துடித்து - துடித்து; அருந்துயர வெள்ளத்து ஆழ்ந்தனள் - கடத்தற்கரிய துன்பமாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து; புலம்பலுற்றாள் - புலம்பத் தொடங்கினாள். |
அழக் கண்டும் - தேவர் முதலிய இராவணன் பகைவர் அழக் கண்டும் என்க. இவ்வாறு கொண்டால்தான், இலங்கையின் காட்சி கண்ட அனுமன் கூறிய, |
"அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன் |
(கம்ப. 4864) |
என்ற பாடலோடு முரணாகாமை அறிந்து கொண்டதாக ஆகும் என்க. தான் அழாமையோடு பிறர் அழுவதைப் பார்த்தும் அறியாதவள் எனப் பொருள் கோடல் சிறப்பு. மேவுதல் - பொருந்துதல், போழ்தல் - பிளத்தல், |
(267) |
கலிவிருத்தம் |
7994. | ‘மாட்டாயோ, இக் காலம் வல்லோர் வலி தீர்க்க? மீட்டாயோ, வீரம்? மெலிந்தாயோ, தோள் ஆற்றல்? கேட்டாய் உணர்ந்திலையோ? என் உரையும் கேளாயோ? காட்டாயோ, என்னுடைய கண்மணியைக் காட்டாயோ? |
இக்காலம் - இப்பொழுதே; வல்லோர் வலிதீர்க்க மாட்டாயோ - (மகனைக் கொன்ற) வலியவர்களின் வலிமையைத் தீர்க்க மாட்டாயா?; வீரம் மீட்டாயோ - வீரத்தை மீண்டும் பெற்று விட்டாயா?; தோள் ஆற்றல் மெலிந்தாயோ - தோள் வலிமை |