பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 213

மெலிந்து     விட்டாயா?;  கேட்டாய்  உணர்ந்திலையோ  -  (நான்
கூறுவதைக்)  கேட்டு  உணரவில்லையா?; என் உரையும் கேளாயோ -
(அல்லது)  என்  பேச்சை  (நீ)  (காது) கொடுத்துக் கேட்கமாட்டாயா?;
என்னுடைய  கண்மணியை  -  என்னுடைய  கண்ணின் மணிபோன்ற
(மகனைக்);   காட்டாயோ   காட்டாயோ    -    காட்டமாட்டாயா?
காட்டமாட்டாயா?
 

                                                 (268)
 

7995.

‘"இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள்" என்று,
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தரத் தோள் என் மகனை மாட்டா மனிதன்தன்
உந்து சிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தேனே!
 

இந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றாள் என்று-இந்திரனுக்கும்
தோல்வியடையாத  (வலிமையுள்ள)  நல்ல  மகனைப்  பெற்றவள் என்று
(சொல்லி); அந்தரத்து வாழ்வாரும் - வானத்தில் வாழுகின்ற தேவரும்;
ஏத்தும்   -  புகழ்கின்ற;  (புகழ்ச்சி  பெற்ற நான்)   அளியத்தேன்  -
இரங்கத்தக்கவளாய்;  மந்தரத்  தோள்  என்  மகனை  - மந்தரமலை
போன்ற  தோள்களை உடைய என் மகனை;  மாட்டா மனிதன் தன் -
(வலிமையால்   ஒப்பாக)   மாட்டாத   மனிதன்   தன்னுடைய;  உந்து
சிலைப்பகழிக்கு 
  -   செலுத்தும்  வில்லினது  அம்புக்கு;  உண்ணக்
கொடுத்தேனே
- உண்ணப் பலி கொடுத்தேனே.
 

                                                 (269)
 

7996.‘அக்கன் உலந்தான்; அதிகாயன்தான் பட்டான்;
மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார்;
மக்கள் இனி நின்று உளான், மண்டோதரி மகனே;
திக்குவிசயம், இனி, ஒருகால் செய்யாயோ?

 

அக்கன்     உலந்தான்  -  முன்பு  அனுமனால்)  அக்ககுமாரன்
அழிந்தான்;  அதிகாயன்  தான்பட்டான்  -  (இப்போது)  அதிகாயன்
தானும்  பட்டான்;  மிக்க  திறத்து  உள்ளார்கள்  -  மிக்க  வலிமை
உடையவர்கள்;  எல்லாரும்  வீடினார்  -  எல்லோரும் அழிந்தார்கள்;
மக்கள்   இனி   நின்று   உளான் -  மக்களில்  இனி  (உயிருடன்)
நின்றிருப்பவன்;  மண்டோதரி  மகனே  -  மண்டோதரி  மகனாகிய
(இந்திர  சித்தன்)  மட்டுமே;  திக்கு விசயம் இனி - திக்கு விசயத்தை
இனி; ஒருகால் செய்யாயோ - ஒரு முறை செய்து வரமாட்டாயா?