போரில் அவனால் இந்திரனை வெல்ல முடியவில்லை. அப்போது மேகநாதன் மாயையால் மறைந்து போர் செய்து, அவனைக் கலக்கி, மாயைப் பாசத்தால் கட்டி இழுத்துப் போய் இலங்கைச் சிறையில் அடைத்து வைத்தான். அச்செயலை அறிந்த பிரமன் தேவர்கள் சூழ, இலங்கை வந்து இராவணனைப் பார்த்து, இந்திரனை வென்ற உன் மகனுக்கு இந்திரசித் எனப் பட்டம் வழக்கில் அமையட்டும் என்று கூறி இந்திரசித்துனுக்குப் பல வரமும் தந்து இந்திரனைச் சிறை வீடு செய்தான் என்பது புராணச் செய்தி. |
(1) |
8003. | ‘எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு- பட்டான்கொல்? அது அன்று எனின், பட்டு அழிந்தான்கொல்? பண்டு சுட்டான் இவ் அகன் பதியைத் தொடு வேலையோடும் கட்டான் கொல்? இதற்கு ஒரு காரணம் என்கொல்?’ என்றான். |
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் - எட்டுத் திசைகளில் உள்ளார் யாவரையும் வென்றவனாகிய இராவணன்; இன்றும் - (முதல்நாள் போலவே) இன்றும் கூட, ஈடுபட்டான் கொல் - (தோற்று) பெருமை அழியப்பெற்றான் போலும்; அது அன்று எனின் - அது அல்ல என்றால்; பட்டு அழிந்தான் கொல் - (போர்க்களத்தில்); இறந்து அழிந்தான் போலும், பண்டு சுட்டான் - முன்பு இந்நகரைச் சுட்டெரித்தவனாகிய அனுமன்; இவ் அகன் பதியை - இந்த அகன்ற இலங்கை நகரத்தை; தொடு வேலையோடும் - (நகரத்துக்கு நீர் அரணாக உள்ள) சகரரால் தோண்டப் பட்ட கடலுடன்; கட்டான் கொல் - பேர்த்து விட்டான் போலும்; இதற்கு ஒரு காரணம் என் கொல் - இவ்வாறு அரக்க மகளிர் புலம்பி அழுதற்கு உரிய ஒரு காரணம் எதுவாக இருக்குமோ? என்றான் - என்று பலபடி ஐயங்கொண்டு கூறினான். |
ஈடு - பெருமை, தொடுவேலை - கீழ்க்கடலின் வடக்குப் பகுதி சகரரால் தோண்டப்பட்டதால் கடலைச் சாகரம் என்றும் தொடு கடல் என்றும் வழங்குவது உண்டு. |
(2) |
இந்திரசித்தன் - இராவணன் உரையாடல் |
8004. | கேட்டான், ‘இடை உற்றது என்?’ என்று, கிளத்தல் யாரும் மாட்டாது நடுங்கினர், மாற்றம் மறந்து நின்றார். |