இன்று - இப்பொழுது; நினைந்தும் - (நடந்தவற்றை) நினைத்தும்; இயம்பியும் - (உன் மீது) குறை சொல்லியும்; எண்ணியும் தான் என் - (பலவாறு பலவற்றை) எண்ணிப் பார்த்தும் தான் என்ன பயன்? கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் - கொல்லும் தொழில் நின்ற படைக்கலங்களை ஏந்திய என் தம்பியாகிய அதிகாயனைக்; கொன்றுளானை - கொன்றுள்ளவனாகிய; அவன் யாக்கையை - அந்த இலக்குவனுடைய உடம்பை; அந்நின்ற நிலத்து - அவன் நின்ற போர்க்களத்தில்; நீக்கி அல்லால் - உயிர் பிரித்தல் இல்லாமல்; மன் நின்ற நகர்க்கு - நிலை பெறுந்தன்மை பொருந்தி நின்றுள்ள இலங்கை நகருக்கு; இனி வாரலென் - இனி வர மாட்டேன்; வாழ்வும் வேண்டேன் - (அதைச் செய்யாமல் போனால் உயிர்) வாழ்வும் விரும்பேன். |
இலக்குவனைக் கொன்றல்லது நகர்க்கு மீளேன். அவ்வாறு செய்யேனானால் உயிர் வாழேன் என்றவாறு. இது “இன்னது பிழைப்பின் இதுவாகியரெனக் கூறிய துன்னரும் துப்பின் வஞ்சினம்” என்க. (தொல். பொருள் 77) |
(9) |
8011. | ‘வெங் கண் நெடு வானரத் தானையை வீற்று வீற்றாய்ப் பங்கம் உற நூறி, இலக்குவனைப் படேனேல், அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத செங் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க, என்னை! |
வெங்கண நெடுவானரத் தானையை - கொடிய கண்களை உடைய பெரிய வானரப் படையை; வீற்று வீற்றாய் - கூட்டம் கூட்டமாக; பங்கம் உற நூறி - துண்டு பட்டு அழியும்படியாகச் சிதைத்து; இலக்குவனைப் படேனேல் - (எம்பியைக் கொன்ற) இலக்குவனைப் போரில் கொல்லாது விடுவேன் எனின்; அங்கம் தர அஞ்சி - (போரில் புறங்கொடாது) மார்பு காட்டி (நிற்பதற்கு) பயந்து; என் ஆணை கடக்கலாத - என் ஆணையை மீற முடியாத; செங்கண் நெடுமால் முதல் தேவர் - சிவந்த கண்களை உடைய திருமாலை முதலாகக் கொண்ட தேவர்கள்; என்னைச் சிரிக்க - என்னைப் பார்த்து நகைக்கட்டும். |
(10) |
8012. | ‘மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்தன் ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள் உண்டிலாளேல், |