பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 229

வில்லாளன் கொடுத்த, விரிஞ்சன் அளித்த, வெம்மை
அல்லால் புரியாதன, யாவையும் ஆய்ந்து, கொண்டான்.

 

பண்டு தேவர் எல்லாரும் - முற்காலத்தில் தேவர்கள் எல்லோரும்;
முனைத்தலை யாவரும் ஈந்த - போர்க்களத்தில் (இந்திர சித்தனுக்குத்
தோற்றுக்)    கொடுத்தவையும்;    மேருவில்லாளன்   கொடுத்த   -
மேருமலையை   வில்லாகக்  கொண்ட  சிவபிரான்  கொடுத்தவையும்;
விரிஞ்சன்  அளித்த  -  பிரமன் கொடுத்தவையும் (ஆகிய); வெம்மை
அல்லால்   புரியாதன
  -   கொலைத்   தொழில்   அல்லது  வேறு
புரியாதனவுமாகிய; பல்லாயிரம்  கோடி  படைக்கலம்  -  பல்லாயிரம்
கோடி  என்னும்  படியான  (மிகப்பல)  படைக்கலங்கள்;  யாவையும்
ஆய்ந்து   கொண்டான்
 -  எல்லாவற்றையும்  ஆராய்ந்து  எடுத்துக்
கொண்டான்.
 

                                                  (18)
 

8020.

நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப;
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது; வானுளோரும்
தேறாதது-மற்று அவன் ஏறிய தெய்வ மாத் தேர்.

 

அவன்   ஏறிய தெய்வ மாத்தேர் - அந்த இந்திர சித்தன் ஏறிய
தெய்வத்தன்மை   பொருந்திய   பெரியதேர்;  நூறாயிரம்  யாளியின்
நோன்மை   தெரிந்த
  -   நூறாயிரம்   யாளிகளின்   வலிமையைத்
(தனித்தனியாகக்)   கொண்ட;  அன்னவை  அவை  ஆயிரம்  ஏறாம்
சீயத்து
 -  அப்படிப்பட்ட  தொகுதியாகிய ஆயிரம் ஆண்சிங்கங்கள்;
பூண்டது என்ப - பூட்டப்பெற்றது;மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது -
வேறாகிய  ஓர்  இலங்கையை ஒத்துள்ளது; வானுளோரும் தேறாதது -
தேவர்களாலும் இத்தன்மையது என அறியப்படாதது.
 

                                                  (19)
 

8021.

பொன் சென்று அறியா உவணத் தனிப் புள்ளினுக்கும்,
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும், மேல் நாள்,
பின் சென்றது அல்லது ஒரு பெருஞ் சிறப்பு உற்ற போதும்,
முன் சென்று அறியாதது, மூன்று உலகத்தினுள்ளும்.