பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 237

குழந்தையாய்   இருக்கையில் இளஞ்சூரியனைக் கனிந்த பழம் என்று
எண்ணிப்   பிடிக்கப்   பாய்ந்தபோது,   இந்திரன்  அவனைத்  தன்
வச்சிராயுதத்தால்  அடிக்க  அதனால்  கன்னம்  சிதைந்து  அனுமன்
என்னும் இப்பெயர் இந்திரனால் இடப்பட்டது என்பது கதைச் செய்தி.
 
 

                                                  (32)
 

8034.

என்று, அவன் இறைஞ்சினன்; இளைய வள்ளலும்,
‘நன்று’ என மொழிதலும், நணுகினான் அரோ-

வன் திறல் மாருதி, ‘இலங்கைக் கோ மகன்
சென்றனன் இளவல்மேல்’ என்னும் சிந்தையான்.

 

என்று     - என்று கூறி; அவன் இறைஞ்சினன் - அந்த வீடணன்
வணங்கினான்;   இளைய   வள்ளலும்   -   இளைய   வள்ளலாகிய
இலக்குவனும்;  நன்று  என  மொழிதலும்  -  நல்லது  என்று  கூறிய
உடனே;    இலங்கைக்   கோமகன்    -   இலங்கை   அரசனாகிய
இராவணனுடைய  மகன்;  இளவல்  மேல்  சென்றனன்  என்னும்  -
இளவலாகிய   இலக்குவன்  மீது  செல்லுகிறான்  என்று  எண்ணுகிற;
சிந்தையான்  - மனத்தினை உடையவனான; வன்திறல் மாருதி - மிகு
வலி  உடைய  அனுமன்;  நணுகினான்  -  (இலக்குவனை)  நெருங்கி
வந்தான். அரோ - அசை.
 

                                                  (33)
 

8035.

கூற்றமும் கட்புலம் புதைப்ப, கோத்து எழு
தோற்றமும், இராவணி துணிபும், நோக்குறா,
மேல் திசை வாயிலை விட்டு, வெங் கடுங்
காற்று என அணுகினன், கடிதின் வந்துஅரோ,

 

கோத்து     எழு - (போருக்கு உரிய படைக்கலங்களைக்) கோத்து
எடுத்துகொண்டு   எழுகின்ற;   இராவணி  -  இராவணன்  மகனாகிய
இந்திரசித்தனது;  தோற்றமும்  துணிபும் நோக்குறா - தோற்றத்தையும்
துணிவையும்  பார்த்து; கூற்றமும் கட்புலம் புதைப்ப - (அனுமன் தன்
விரைவு  கண்டு)  இயமனும் (அஞ்சிக்) கண்களை மூடிக்கொள்ளுமாறு;
மேல்திசை  வாயிலை விட்டு - (தான் இருந்த இலங்கையின்) மேற்குத்
திசை  வாயிலை  விட்டு;  வெங்கடுங்காற்று என - கொடிய வேகமான
காற்றுப்போல;   கடிதின்    வந்து    அணுகினன்    -   விரைந்து
(இலக்குவனிடம்) வந்து சேர்ந்தான்.
 

                                                  (34)