பக்கம் எண் :

238யுத்த காண்டம் 

8036.

அங்கதன் முன்னரே ஆண்டையான்; அயல்
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார்;
செங் கதிரோன் மகன் முன்பு சென்றனன்,
சங்க நீர்க் கடல் எனத் தழீஇய தானையே.

 

முன்னரே  - முன்பே;  அங்கதன்  ஆண்டையான்  - அங்கதன்
(இலக்குவன்   இருந்த)  அந்த   இடத்திற்கு   வந்து  சேர்ந்திருந்தான்;
துங்கவன்  தோளினார்  அயல்   எவரும்  சுற்றினார்  -  உயர்ந்த
வலிமையான  தோள்களை உடைய  பிற வானர  வீரர்கள் அனைவரும்
(இலக்குவனுக்குத்  துனணயாக  அவனைச்)  சுற்றிச்  சூழ்ந்தனர்;  சங்க
நீர்க்கடல் எனத் தழீஇய தானையே
- சங்குகள் நிறைந்த நீரையுடைய
கடல்   போல  (இலக்குவனைக்)   குரங்குச்   சேனை  சூழ்ந்து  நிற்க;
செங்கதிரோன்   மகன்   -  சிவந்த  கதிர்களை  உடைய  கதிரவன்
மகனாகிய  சுக்ரீவன்; முன்பு சென்றனன் - (இலக்குவனுக்கு முன்னால்)
போரிடச் சென்றான்.
 

                                                  (35)
 

                                    இரு படைகளும் பொருதல்
 

8037.

இரு திரைப் பெருங் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
வருவன போல்வன்-மனத்தினால் சினம்
திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே.

 

மனத்தினால் சினம் திருகின - மனத்தில் சினம் முதிர்ந்தவையாகி;
எதிர் எதிர் செல்லும் தானையே - எதிர் எதிராகச் செல்லும் (அரக்கர்
படை, குரங்குப் படை என இருபக்கத்துப்) படைகளும்; பொருதொழில்
வேட்டு
- போர்த் தொழிலை விரும்பி; ஆர்த்துப் பொங்கின எழுந்து -
பேரொலி  செய்து  பொங்கி  எழுந்து;  இரண்டு திக்கினும் - இரண்டு
திசைகளில்  இருந்தும்;  இருதிரைப் பெருங்கடல் - பெரிய அலைகள்
உடைய   பெருங்   கடல்கள்   (இரண்டு);   வருவன  போல்வன  -
வருவனவற்றை ஒத்தன.
 

                                                 (36)
 

8038.

‘கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து,
எண்ணினால் பெறு பயன் எய்தும், இன்று’ எனா,
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்-
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே.