(அவ்வாறு எண்ணுபவர் மனம்) இருள் உடையது என்று (அவர்களுக்கு) விளக்கம் தராமல் நிற்பாய்; அந்நொப்பமே கொல் - (இவ்வாறு உன் செய்கை அறியப்படாமல் இருப்பதற்குக் காரணம்) அந்தப் புத்தியின் சிறுமையோ? பிறிதே கொல் - (அல்லது) வேறு ஏதாகிலும் உளதோ? இவ் அதிரேக மாயை - இந்த மிக்க மாயச் செயலை; அறிவார் ஆர் - அறிபவர் யாவர்? |
திருமால் பிரத்யும்னனாய் இருந்து பிரமனைக் கொண்டு படைத்தல் தொழிலையும் சங்கர்ஷணனாயிருந்து உருத்திரனைக் கொண்டு அழித்தல் தொழிலையும் நடத்துகிறான் என்பதால் உன் ஒக்க வைத்த இருவர் என்றார். நொப்பம் - நொய்ப்பம் - புத்தியின் சிறுமை. |
(253) |
8255. | ‘வாணாள் அளித்தி, முடியாமல்; நீதி வழுவாமல் நிற்றி;-மறையோய்! பேணாய், உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று; பெறுவான் அருத்தி பிழையாய்; ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி; உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய், ஆண் ஆகி, மற்றும் அலி ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? |
மறையோய் - வேத வடிவானவனே; வாணாள் அளித்தி - உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் (வினைக்குத்தக) வாழும் நாளைக் கொடுக்கின்றாய்; முடியாமல் - எக்காலத்திலும் அழியாமல்; நீதி வழுவாமல் நிற்றி - அறநெறி தவறாமல் நிற்கிறாய்; உனக்கு ஒரு பொருள் வேண்டும் என்று பேணாய் - (குறைவிலா நிறைவாக நீ இருப்பதால்) உனக்கு (வேறு ஒரு) பொருள் வேண்டும் என்று (நீ) விரும்புவதில்லை; பெறுவான் அருத்தி பிழையாய் - (உன்னடியார்) பெறுவதற்கு விரும்பும் பொருள்களைத் தவறாமல் கொடுப்பாய்; ஊண் ஆய் - நுகர் பொருளாகவும்; உயிர்க்கு உயிர் ஆகி - உயிருக்கு உயிராகவும்; உணர்வு ஆய - ஐம்புல உணர்வுகளுக்கும் அரிய ஆய; பெண்ணின் உரு ஆய் - பெண்ணின் உருவாகியும்; ஆண் ஆகி - ஆணின் வடிவம் ஆகியும்; மற்றும் - அவையல்லாமல்; அலி ஆதி - அலியின் வடிவமாகியும்; நிற்றி - நிற்கின்றாய்; இவ் அதிரேகமாயை - இந்த மிக்க மாயச் செயலை; அறிவார் யார் - அறிபவர் யாவர்? |