திருமாலின் பண்புகளாகிய (1) வினைக்கேற்ற பயன் தருதல் (2) அழியாப் பெருநிலை (3) மறைகளால் உணரப்பட்டு மறை வடிவினன் ஆதல் (4) குறைவிலா நிறைவாக எல்லாப் பொருளும் உடையவன் ஆக இருத்தல் (5) அடியவர்க்கு வேண்டுவன வேண்டியவாறு தருதல் (6) நுகர் பொருள்கள் ஆதல் (7) பல் உருவினன் ஆதல் (8) எல்லாப் பொருள் உருவங்களும் தன் உருவமாதல் என்பவை இப்பாடலில் கூறப்பட்டுள்ளன. |
(254) |
8256. | ‘”தான் அந்தம் இல்லை; பல” என்னும், ஒன்று; “தனி” என்னும், ஒன்று; “தவிரா ஞானம் தொடர்ந்த சுடர்” என்னும், ஒன்று; “நயனம் தொடர்ந்த ஒளியால், வானம் தொடர்ந்த பதம்” என்னும், ஒன்று; மறை நாலும் அந்தம் அறியாது, “ஆனந்தம்” என்னும்; “அயல்” என்னும்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? |
மறைநாலும் - வேதங்கள் நான்கும்; அந்தம் அறியாது - உண்மை முடிவு தெரியாத காரணத்தால்; ஒன்று - (அவற்றில்) ஒரு மறை; தான் அந்தம் இல்லை பல என்னும் - உன் சொரூபம் எல்லையில்லாத பல படித்தானது என்று கூறும்; ஒன்று - பிறிதொரு மறை; தனி என்னும் - ஒரே மூர்த்தம் என்று கூறும்; ஒன்று - பிறிதொரு மறை; தவிரா ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் - நீங்காத ஞானம் பொருந்திய ஒளி என்று கூறும்; ஒன்று - மற்றொரு மறை; நயனம் தொடர்ந்த ஒளியால் வானம் தொடர்ந்த பதம் என்னும் - புறக்கண்ணால் காணக் கூடிய ஒளி வடிவாகி ஆகாயத்தை இடமாகக் கொண்டு பொருந்தி உள்ளது என்று கூறும்; மறை நாலும் - இவ்வாறு வேதங்கள் நான்கும்; அந்தம் அறியாது - உண்மைத் தன்மையை அறிய முடியாமல்; ஆனந்தம் என்னும் - பேரானந்த மயமானது என்னும்; அயல் என்னும் - வாக்கு காயங்களுக்குக் கோசரமாகாதது என்றும் கூறித் தடுமாறும் ஆகவே; இவ் அதிரேகமாயை - இந்த மிக்கமாயச் செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள். |
திருமால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று சுட்டி உணரப்படாது வேதம் கிடந்து தடுமாறும் வஞ்சவெளியாக இருப்பதை இப்பாடல் உணர்த்தி நிற்கிறது. |
(255) |