| எழ மிசை, உலகம் மேல் மேல் ஏங்கிட, இரிந்து சிந்தி மழை விழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ. |
அண்ணல் - தலைமைப் பெருமை உள்ள இராமன்; அழகிது என்று கூற - (இதுவே) தகுதி உடையது என்று கூற; கடல்கள் அஞ்சிக் குழைவுற - (வானரப் படைவீரர்கள்) கடல்கள் எல்லாம் அஞ்சிக் கலக்கமுறவும்; அனந்தன் குன்றின் உச்சி நின்று - ஆதிசேடனது மலைபோன்ற தலையின் உச்சியில் இருந்து; அண்ட கோளம் மிசை எழ - உலக உருண்டை மேல் நோக்கி எழவும்; உலகம் மேல் மேல் ஏங்கிட - உலகத்து உயிர்கள் மேலும் மேலும் ஏக்கம் கொள்ளவும்; மழை இரிந்து சிந்திவிழ - மேகங்கள் நிலை கெட்டுச் சிதறி விழவும்; மலைகள் கீற - மலைகள் பிளவுபடவும்; மாதிரம் பிளக்க - திசைகள் பிளவுபடவும்; ஆர்த்தனர் மாதோ - பேரொலி செய்தனர். |
(273) |
இராவணன் ஆர்ப்பொலி கேட்டல் |
8275. | பழிப்பு அறு மேனியாள்பால் சிந்தனை படர, கண்கள் விழிப்பு இலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும் குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி கிழிப்புற, உயிரிப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன் கேட்டான். |
பழிப்பு அறு மேனியாள் பால் - பழிப்பதற்கு அருமையான திருமேனி அழகுடைய சீதையின் இடத்தில்; சிந்தனை படர - மனம் சென்று பரவியதனால்; கண்கள் விழிப்பு இலன் - கண்களை விழித்துப் பார்த்தலும் இல்லாதவனாய்; மேனி சால வெதும்பினன் - உடம்பு விரகவேதனையால் மிக வெதும்பப்பெற்று; ஈசன் வேலும் - சிவபிரானது சூலவேலும்; குழிப்பு அரிது ஆய மார்பை - துளைப்பதற்கு அருமையான (மிக்க வலிமைஉடையதன்) மார்பை; மன்மதன் கொற்ற வாளி கிழிப்புற - மன்மதனது வெற்றி பொருந்திய அம்புகள் ஊடுருவிப் புறம் போக; உயிர்ப்பு வீங்கி - பெருமூச்சு மிகுதியாக; கிடந்த - விட்டுக்கொண்டு கிடந்த; வாள் அரக்கன் - வாள் படையை உடைய அரக்கனாகிய இராவணன்; கேட்டான் - (வானரப் படையினர் எழுப்பிய பேரொலியைக்) கேட்டான். |