இந்திரசித்தனை இராவணன் காணல் |
8286. | அரக்கனும், மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்த மாடம் பொருக்கெனச் சென்று புக்கான், புண்ணினில் குமிழி பொங்கத் தரிக்கிலன், மடங்கல்ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன, கருக் கிளர் மேகம் அன்ன, களிறு அனையானைக் கண்டான். |
அரக்கனும் - அரக்கனாகிய இராவணனும்; மைந்தன் வைகும் - தன் மகனாகிய (இந்திரசித்தன்) தங்கி உள்ள; ஆடகத்து அமைந்த மாடம் - பொன்னால் செய்யப்பட்ட மாளிகைக்குள்; பொருக்கெனச் சென்று புக்கான் - விரைவாகச் சென்று சேர்ந்தான்; புண்ணினில் குமிழி பொங்கத் - (இலக்குவனது அம்புகள் துளைத்த) புண்களில் (இருந்து) இரத்தக்குமிழி பொங்கி வெளிப்படத்; தரிக்கிலன் - பொறுக்க மாட்டாதவனாகி; மடங்கல் ஏற்றால் - ஆண் சிங்கத்தினால்; தொலைப்புண்டு சாய்ந்து போன - வலிமை கெட்டு ஒழிந்து போன; கருக்கிளர் மேகம் அன்ன - கருமையான நீர் பொருந்திய மேகத்தைப் போன்ற; களிறு அனையானைக் கண்டான் - ஆண் யானையைப் போன்றவனாக உள்ள இந்திர சித்தனைக் கண்டான். |
(285) |
8287. | எழுந்து அடி வணங்கல் ஆற்றான், இரு கையும் அரிதின் ஏற்றித் தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன், ‘தோன்றல்! அழுங்கினை; வந்தது என்னை அடுத்தது?’ என்று எடுத்துக் கேட்டான்; புழுங்கிய புண்ணினானும், இனையன புகலலுற்றான்; |
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் - எழுந்து (தந்தையின்) அடி வணங்குவதற்குக் கூட முடியாதவனாய்; இருகையும் அரிதின் ஏற்றித் - (தன் இரண்டு) கைகளையும் (பெருமுயற்சி செய்து) அருமைப்பாட்டோடு (தலைக்கு) மேல் தூக்கி; தொழும் தொழிலானை நோக்கித் - தொழுகின்ற தொழிலை உடையவனான |